நீதி மன்றத்தில் உண்மையை மறைத்து ஒரு தீர்வு பெறப்படுகிறது. அதற்கு பின் புலமாக நலநோக்கம் இருப்பதால் அரசு அதிகாரிகள் அதற்கு துணை நிற்பதாக காட்டியிருப்பது மிகத்தவறான உதாரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு “ஆர் யூ ஓகே பேபி “விமர்சனத்தை தொடரலாம்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிற முல்லை அரசியும் ,லவ்வர் அசோக்கும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் .வறுமை, சூழலால் அந்த குழந்தையை அவர்களால் வளர்க்க முடியவில்லை. புத்திர பாக்கியம் இல்லாத சமுத்திரக்கனி ,அபிராமி பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கி வளர்க்கிறார்கள். முறைப்படி தத்து நடக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றது .
காதலனால் கைவிடப்படுகிறாள் முல்லை . பெற்ற குழந்தை மீது பாசம் வருகிறது. தனியார் தொலைக்காட்சி நடத்துகிற ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சி குழுவினரை நாடுகிறாள். தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் உதவ மறுக்கிறார் . இதனால் முல்லை சட்ட வழியாக போராடுகிறார். தீர்வு என்ன என்பதை சொல்லியிருப்பவர்கள் ,அரசு குழந்தைகள் காப்பகங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.
இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் சமூகத்துக்கு தேவையான கருத்தை உணர்வுப் பூர்வமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள். தத்து எடுப்பதில் நேர்மையான ,சரியான சட்ட நடை முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
சில தனியார் தொலைக்காட்சிகளின் தில்லாலங்கிடி வேலைகளையும் சொல்லத் தவற வில்லை. அனுபவம் பேசியிருக்கிறது.
முல்லை அரசி, அபிராமி, அனுபமா, லட்சுமிராமகிருஷ்ணன் என்கிற நால்வரில் முல்லை அரசி சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். அவரது கேரக்டர் அப்படி .! சமுத்திரக்கனி. மிஷ்கின், நீதிபதி நரேன் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.நரேன் சிறப்பு.!
இளையராஜாவின் பின்னணி இசை, பழைய பாடலை நினைவூட்டினாலும் செவிக்கு இனிமையாக இருக்கும் பாடல் .. வாவ்.!
நல்ல முயற்சி.!