மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ்.(வயது 77).சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
கடந்த 1975-ம் ஆண்டு வெளியான ‘ஸ்வப்னதானம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.ஜி.ஜார்ஜ்,தொடர்ந்து,ஊழ்க்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் ஆகிய பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார்.
மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,“மலையாளத் திரையுலகின் புதிய அலை இயக்குனர்களுள் ஒருவரான கே.ஜி. ஜார்ஜ் மறைந்தார். இரகள், ஸ்வப்னாடனம், மற்றொராள், ஊழ்க்கடல், மேளா, யவனிகா உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களைத் தந்தவர். மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைவராகவும் பங்களிப்பாற்றினார்.
கே.ஜி. ஜார்ஜ் பெற்ற தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் அவரது திறமைக்குச் சான்று. இலக்கியத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த உயரிய விருதான முட்டத்துவர்க்கி விருது, ‘இரகள் திரைக்கதையும் ஓர் இலக்கிய வகைமையே’ எனும் குறிப்புடன் அவருக்கு வழங்கப்பட்டது. தனித்துவம் மிக்க இயக்குனருக்கு எனது அஞ்சலி.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.