நடிகர் சித்தார்த் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ள திரைப்படம் சித்தா. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சொல்லும் இப்படம் கன்னடத்தில் சிக்கு என்ற பெயரில் வெளியாகியுள்ளது
இந்நிலையில் இப்படத்தின் புரோமோசனுக்காக கர்நாடகாவுக்கு சென்ற படத்தின் நடிகர் சித்தார்த், பெங்களூரு எஸ்.ஆர்.வி திரையரங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படம் தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது கழுத்தில் சிவப்பு – மஞ்சள் நிற துண்டு போட்டுக்கொண்டு அத்துமீறி நுழைந்த கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர்,மேடையில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கொண்டு அவரை உடனடியாக வெளியேறுமாறு மிரட்டினர்.
தண்ணீர் தமிழ்நாட்டுக்கு போகிறது; நீங்கள் படம் பற்றி பேசுகிறீர்களா?” மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி அவர்கள் ஆவேசமாக கத்தினர். முதலில் அவர்கள் மிரட்டலை கண்டுகொள்ளாமல் சித்தார்த் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கூச்சலிட்டனர். மேலும்,அங்கு அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களை பார்த்து, “இது இப்போ தேவையா.. தமிழ் படத்தை பற்றி இப்போது பேசனுமா. நீங்கள் எல்லோரும் வீதிக்கு வாங்க. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று போராடுங்க. அதை விட்டுட்டு படத்தை பற்றி பேசுவதா.” என அவர்களையும் மிரட்டினர். இதையடுத்து நடிகர் சித்தார்த் பேச்சை நிறுத்திவிட்டு செய்தியாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சித்தார்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தென் இந்திய சினிமாவில் பிரபலமான முகமாக அறியப்பட்டு வரும் இவர், சமூக வலைதளங்களில் மத்திய அரசு, பாஜகவை கடுமையாக விமர்சித்து அதற்காக பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “பல தசாப்தங்களாக பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக, கன்னடர்கள் சார்பாக நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள இதே ‘எக்ஸ்’ தள பதிவை முன்னதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘காவிரி எங்களுடையது’..ஆமாம் நமக்கு சொந்தமானது . என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பலரும் காவிரி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டி கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.