Rating;3/5
பேயை விரட்டுகிறேன், ஆவியை துரத்துகிறேன், பில்லி,சூனியமா நான் எடுத்து காட்டுகிறேன் என பேய்.பிசாசுகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் நபர்களை குறி வைத்து, ஊரையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும்அவரது குடும்பமும் ஒரிஜினல் பேய்,ஆவியிடம் நிஜமாகவே மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்…? என்பதை இயக்குனர் கோகுல் தன கற்பனைச் சிறகுகளை விரித்து திரைக்கதையாக்கி விரித்து பறக்க முயற்சித்திருக்கிறார்.அவருக்கு துணையாக கார்த்தியும் படத் தயாரிப்பாளரும் உடன் நின்றுள்ளனர்.
பேய் ஓட்டுவதிலும், பில்லி சூனியம் எடுப்பதிலும், தொலைக்காட்சியில் ‘லைவ் ஷோ’ நடத்தும் அளவுக்கு அசகாய சூரன் என பெயரெடுத்த காஷ்மோரா என்ற கார்த்தியும், அவரது அப்பா விவேக், அம்மா உள்ளிட்ட குடும்பமே, மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க, இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை மக்களுக்கு தெரியப்படுத்த, கார்த்தியிடம் உதவியாளராக வேலைக்கு சேருகிறார் ஸ்ரீதிவ்யா.இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பழைய அரண்மனை பங்களாவில் உள்ள பேய்களை விரட்டினால் பல லட்சம் பணம் தருவதாக ஒருவர் கூற, பணத்துக்கு ஆசைப்பட்ட கார்த்தி மற்றும் அவரது குடும்பமும் ஆந்திராவில் உள்ள பேய் பங்களாவிற்கு செல்கின்றனர்.வழக்கம் போல தன் பித்தலாட்டம் மற்றும் சித்து விளையாட்டுகளை காட்டி பணம்கறந்து விடலாம் எனக்கனக்கு போட்டு அந்த அமானுஷ்யமான பங்களாவிற்குள் நுழையும் கார்த்தியும் அவரது குடும்பமும், நிஜமாகவே காஷ்மோரா என்ற பேய் கும்பல்களிடம் மாட்டிக்கொள்ள அங்கிருந்து தப்பிச் செல்கிறார்களா? இல்லையா? அங்கு என்ன நடக்கிறது என்பதை திக்,திக்,திகில் திரைக்கதையுடன் நகைச் சுவை கலந்து சொல்லியிருக்கும் திரைப்படமே காஷ்மோரா.
கார்த்திக்கு காஷ்மோரா, ராஜ்நாயக் என்று இரட்டை வேடம். பேய் பங்களாவிற்குள் நுழையும் காஷ்மோரா உண்மையான பேயை செட்டப் பேய்கள் என நினைத்து இதெல்லாம் நாங்க அப்பவே பண்ணிட்டோம் .இதெல்லாம் பத்தாது. நம்ம தொழிலுக்கு டைமிங் முக்கியம் ஆனா,இங்கே டைமிங் மிஸ் ஆகுது’, சரி பரவாயில்ல என்கூட சேர்ந்துரு என்றவர் ஒரு கட்டத்துக்கு மேல் பயந்து புலம்பும் போது… சூப்பர் கார்த்தி! மொட்டைத் தலையுடன் அட்டகாசமான வில்லங்கச் சிரிப்புடன் ராஜ்நாயக்(கார்த்தி) வாள் வீசும் காட்சிகள்… செம! இரு கேரக்டர்களையும் மிக நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.குழந்தைகளிடம் காஷ்மோரா ஒட்டிக்கொள்கிறான். நயன்தாரா இடம் பெறும் காட்சிகள் குறைவு என்றாலும் நயனனின் நடிப்பு, வாள்வீச்சு,ஸ்டைல் என அசத்தி விடுகிறார்.நயனின் இடத்தை இன்னும் சில வருடங்களுக்கு வேறு யாரும் பிடித்து விட முடியாது என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.. நயனின் காட்சிகள் அனைத்தும் கம்பீரம் கலந்த வசீகரம்.ஸ்ரீதிவ்யா தன் பாத்திரத்திற்கேற்றவாறு நடித்திருக்கிறார்.. நெடுநாட்களுக்குப் பிறகு விவேக் காமெடியில் கலக்கியிருக்கிறார்.இவரின் கேரக்டர்(தோற்றம்) சாமியார் ஒருவரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இயக்குனரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்காட்சிகளில் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை கூடுதல் பலம். ரத்னமாதேவியின் அந்தப்புர அரண்மனை செட் மற்றும் , கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள செட்ஆகியவை நம் கண்முன் பிரம்மாண்டத்தை கொண்டு வந்து நிறுத்துகிறது.முதல் பாதி கலகலவென சூப்பர்! இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தொய்வு ஏற்படுத்துவதை தவிர்க்க எடிட்டர் கத்திரியின் உதவியை நாடியிருக்கலாம்.மொத்தத்தில் பல குறைகள் இருந்தாலும் காஷ்மோராவுக்காக கண்டுக்காம விட்டு விடலாம்