‘ஆர்எக்ஸ் 100’ மற்றும் ‘மகா சமுத்திரம்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரித்துள்ள இப்படத்தில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். ‘கோ’ புகழ் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘என் நெஞ்சம் நீந்துதே’ இன்று வெளியாகியுள்ளது. இந்திய அளவில் ‘கந்தாரா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜனீஷ் லோக்நாத், ’செவ்வாய்கிழமை’ படத்திற்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார். பழனி பாரதி பாடல்களை எழுதியிருக்க, ஹர்ஷிகா தேவநாத் பாடியுள்ளார்.
அழகான கிராமப்புறத்தின் பின்னணியில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலில் பாயல் ராஜ்புத் மற்றும் அஜ்மல் அமீருடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிச்சயம் உங்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
’செவ்வாய்கிழமை’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ஹிட். அந்தப் பாடலின் மூலம் கிராமத்து மக்களிடையே உள்ள அச்ச உணர்வை இயக்குநர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் ஒரு கொலை நடப்பது பற்றிய சில குறிப்புகளையும் இந்தப் பாடல் தந்தது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள இந்தப் பாடலில், பாயலின் கதாபாத்திரத்தின் மூலம் காதல் வெளிப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் ஸ்வாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், “அஜய் பூபதி வெறும் பாடல்களை மட்டும் தராமல் அதன் வழியே கதையும் சொல்வதால் அவை மிகவும் சிறப்பாக வெளிப்படும். ‘என் நெஞ்சம் நீந்துதே’ ஒரு குறிப்பிட்ட சூழல் கொண்ட காதல் பாடல். இந்தப் பாடல் வழியே பாயல் கதாபாத்திரத்தின் பின்னணியும் சொல்லப்பட்டுள்ளது. முதல் பாடலைப் போலவே இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. டிரெய்லர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். படத்தை நவம்பர் 17ம் தேதி பெரிய அளவில் வெளியிடுவோம்” என்றனர்.
இந்தப் படம் ஒரு வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லர் என்று இயக்குநர் அஜய் பூபதி கூறியுள்ளார். மேலும், “படம் பல உணர்வுகளைப் பற்றியது. அதில் காதலும் ஒன்று. அஜ்னீஷ் லோக்நாத் நல்ல இசையைக் கொடுத்துள்ளார். பாடல்களை அழகாகப் படமாக்கியுள்ளோம். தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.