அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அஜர்பைஜானில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தின் கலை இயக்குனராக மிலன் (வயது 54) பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், இன்று காலை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்காக தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்த கலை இயக்குனர் மிலனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை படக்குழுவினர் மருத்துவமனை அழைத்து சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அஜித் உள்பட விடாமுயற்சி படக்குழுவினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணியாற்றி சிட்டிசன், தமிழன், ரெட், அந்நியன் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்,கடந்த 2006-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான கலாப காதலன் படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார் தொடர்ந்து ‘ஓரம்போ’ படத்தில் பணியாற்றிய மிலனுக்கு அஜித்தின் விடாமுயற்சி பட வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக மிலன் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.