பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை விக்ரம் ராஜேஸ்வர் – அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர்.இதில் கதாநாயகனாக வைபவ் நடிக்க, கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்கிறார்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு 12 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எக்ஸ்டெரோ (EXTERRO} என்கிற மாபெரும் மென்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் பாபி பாலச்சந்திரன். திருநெல்வேலியின் அருகில் உள்ள நாசரேத்தை சேர்ந்த இவரது நிறுவனத்தின் மென்பொருட்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தலைசிறந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வெளிநாடுகளில் அரசு, உளவு, ராணுவம் போன்ற துறைகளில் இந்நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி எண்ணற்ற குற்றங்களை தடுத்தும் குறைத்தும் பாதுகாத்து வருகிறார்கள். தாய்நாடு மட்டுமல்லாமல் இதர நாடுகளிலும் தொண்டு நிறுவனங்களை துவங்கி சமூகப் பணியையும் செய்து வரும் பாபி பாலச்சந்திரன் மென்பொருள் துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார் பாபி பாலச்சந்திரன்.