லைகா புரடக்சன்ஸ் தனது அடுத்த வெளியீடான ‘லால் சலாம்’ படத்திற்காக போஸ்ட் புரடக்சன் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இந்த இருவரும் இடம்பெற்றுள்ள ஒருசில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை விஷ்ணு ரங்கசாமியும் படத்தொகுப்பை பிரவீன் பிரபாகரும் மேற்கொண்டுள்ளனர். இந்த வருடத்தின் துவக்கத்தில் புனித நாளான ஹோலிப்பண்டிகையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சுபாஷ்கரன், லைகா புரடக்சன்ஸ் தலைமை பொறுப்பு வகிக்கும் G.K.M தமிழ்க்குமரன் மற்றும் படக்குழுவினர் வரும் 2024 பொங்கல் பண்டிகையில் ‘லால் சலாம்’ வெளியாகும் என சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகமெங்கும் இந்தப்படத்தை வெளியிட இருக்கிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் டீசரை தீபாவளி தினமான இன்று லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. கிரிக்கெட் தான் இதன் மையக்கருவாக இருந்தாலும், அரசியல் மற்றும் அழுத்தமான சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் லால் சலாம் கவனம் செலுத்துகிறது.