லியோ’” படத்தில் நடித்தது குறித்து தனியார் சேனல் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், ‘திரிஷா குறித்து பேசுகையில்,’லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறோம் என்றதும், பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு,, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன் என மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைக் கூறினார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, “இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்றும் கூறியிருந்தார்.
இவ்விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்பராஜ், குஷ்பு உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.நடிகர் சங்கமும் இவ்விவகாரத்தில்,மன்சூர் அலிகானுக்கு ‘உங்களை ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக்கூடாது’ என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று காலை அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,,”நான் திரிஷாவை பற்றியோ மற்ற எந்த நடிகைகள் பற்றியோ தவறாக எதுவும் பேசவில்லை. அந்த வீடியோவை எடிட் செய்து போட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவை முழுசா பார்த்த நான் பேசியது என்ன என்று தெரியவரும்.நானும் பல திரைப்படங்களை எடுத்து இருக்கிறேன், படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த நடிகை பத்திரமாக வீட்டுக்கு போய் விட்டார்களா என்று பார்ப்பேன். சினிமாவை தாண்டி அவர்கள் மீது என் நகம் கூட பட்டது இல்லை, அப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் ஒரு நடிகராகத்தான் என் கருத்தை பகிர்ந்தேன். ஆனால், என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்று இதை செய்கிறார்கள்.
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது இந்த பிரச்சனையை பெரிசாக்கி, அரசியல் ரீதியாக என்னை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மேலும், திரிஷா இனி வரும் நாட்களில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று சொன்னது மன வருத்தத்தை தருகிறது. நான் அந்த அளவுக்கு மோசமான ஆளா. ஏன்டா லியோ படத்தில் நடித்தோம், இந்த படத்தில் நடிக்காமலே இருந்து இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் . நான் திரிஷாவை பற்றியோ மற்ற எந்த நடிகைகள் பற்றியோ தவறாக எதுவும் பேசவில்லை. அது எடிட் செய்யப்பட்ட வீடியோ. அந்த வீடியோவை முழுசா பார்த்த நான் பேசியது என்ன என்று தெரியவரும்.
நான் தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும் . இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சை ஆனால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு நடவடிக்கையை வாபஸ் பெற்று எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்.மன்சூரலிகான் என்ன இளிச்சவாயனா? நான் எழுந்தால், ஒரு பிரளயமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும் போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்” என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது