கோமதி துரைராஜ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.இப்படத்தின் மைய கதாபாத்திரத்தில்
பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை தர்மதீரன் கவனிக்க,ஆல்வின் இசை அமைத்துள்ளார். கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் டிசம்பரில் ‘ஒடிடி தளத்தில்
வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குநர் கிரண் துரைராஜ் கூறியதாவது,”
வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழன் நான். இப்பொழுது பெங்களூரில் இருக்கிறேன்.
சினிமாவிற்குள் நுழைய நல்ல தொடர்புகள் கிடைக்காத காரணத்தால் தான் குறும்பட பாதையை தேர்ந்தெடுத்தேன். ஜிகர்தண்டா முதல் பாகம் வெளியானபோது தான் சினிமா மீதான ஈர்ப்பு அதிகமானது. 2015லேயே பெங்களூருக்கு அருகிலேயே நடந்த, என்னை ரொம்பவே பாதித்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.பொதுவாக இதுபோன்ற கதைகளில் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆணின் தரப்பிலிருந்து தான் கதை சொல்லப்படும். ஆனால் நான் மாப்பிள்ளையின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை காட்டியுள்ளேன்.
என்னுடைய சொந்த ஊரான வேலூரில் தான் படப்பிடிப்பை நடத்தினோம்.. நானே இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் படத்தொகுப்பையும் செய்துள்ளேன், இங்கே நுழைந்த புதிதில் தமிழில் பேசினால் கூட என்னை கன்னடக்காரனாகவே பார்த்தார்கள். அதனால்தான் என்னுடன் குறும்படத்தில் இருந்தே இணைந்து பயணிப்பவர்களை இதில் இணைத்து கொண்டேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருமே பெங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் தான். அதேசமயம் சினிமாவுக்கு புதியவர்கள் என்றாலும் அனைவரும் மேடை நாடக கலைஞர்களும் கூட.
படப்பிடிப்புக்கு முன்னதாக படத்தின் நட்சத்திரங்களை வைத்து ஒரு மாதம் ஒத்திகை நடத்தினோம்.வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகியவை கதையின் களங்களாக இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று ஊர்களும் மூன்று விதமான மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கின்றன.தான் காதலித்தவனை, ஆணவ கொலை என்ற பெயரில் கொலை செய்கிறார்கள். அதன் பின் அவளை கட்டாய படுத்தி வேறு கல்யாணமும் செய்து வைக்கிறார்கள்.அவளோ, தன் கண்முன் தனது காதலனை கொலை செய்தவர்களை பழிதீர்க்க நினைக்கிறாள். அதை முதலிரவு முதலே செயல் படுத்துகிறாள். அவள் எடுத்த முடிவை, செயலை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?! இதை துணிச்சலோடு செய்திருக்கிறார் நாயகி பவித்ரா தென்பாண்டியன். இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில்.. பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் எடுத்த உண்மையான முடிவுதான் இப்படம். என்கிறார்.