ஆனால், அமீரின் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுத்துள்ளதோடு,’அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை, அவர் தான் என்னை ஏமாற்றிவிட்டார்.நந்தா படத்தில் இருந்து சூர்யா, அமீர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால், அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே படத்தில் சூர்யா நடித்துக் கொடுத்தார். ஆனால் அமீர் இயக்குனர் ஆனதும் ரொம்பவே மாறிவிட்டார்’.அமீர் என்னிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் போனதால், பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கி கொடுத்தார். அதேபோல், ரூ.2.75 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி தருவதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்து ‘பருத்தி வீரன்’ படத்தை எடுத்தார் என அடுக்கடுக்கான புகாரை அமீர் மீது ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சுக்கு இயக்குநரும்,நடிகருமான பாரதிராஜா,சசி குமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், கவிஞர் சினேகன் நடிகர் பொன்வண்ணன்,இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில்,பருத்திவீரன் படத்தின் பிரச்சனை குறித்து தான் பேசியது இயக்குனர் அமீரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் ஞானவேல் ராஜா கூறியுள்ளதாவது,” ‘பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.