தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை தரப்பில் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னொரு அறிக்கை வெளியாகியுள்ளது,அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.
அதாவது விஜயகாந்த் சுவாச பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது பொதுவாக சுவாச பிரச்சனைக்கு தீர்வு காணும் சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது
சாதாரணமாக சுவாசிக்க முடியாதவர்கள் அல்லது நுரையீரல் பிரச்சனையால் சுவாசிக்க இயலாதவர்களுக்கு இந்த சிகிச்சை என்பது அளிக்கப்படும்.
இந்த சிகிச்சை என்பது குரல் நாண்களுக்கு கீழ் கழுத்தில் ஒரு துளையிடப்பட்டு அதன் வழியாக குழாய் மூலம் சுவாசக்குழாய்க்கு சுவாசம் அளிப்பதாகும். மேலும் இந்த சிகிச்சை என்பது அடைப்புகளை நீக்கி நுரையீரலுக்குள் காற்று நுழைய வாய்ப்பை ஏற்படுத்தும்.
இது வலி நிறைந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. இதனால் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் அதற்கு முன்பாக மயக்கமருந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வெண்டிலேட்டர் சிகிச்சையும், அதைத் தொடர்ந்து டிரக்கியாஸ்டமி சிகிச்சையும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.