கட்டில் என்றதுமே பலருக்கு ‘பலான’ நினைப்பு தூக்கலாக இருக்கும். தற்கால ரசனைக்கு நெறி கட்டிப் போயிருப்பதே அதன் காரணம். ஆனால் பரம்பரையும் ,பாசமும் படுத்துறங்கிய இந்த கட்டில் வாரிசுகளை வளர்த்து விட்டிருக்கிறது. ராசியான கட்டிலின் சோகக்கதையை வன்முறையின்றி கொடுத்திருக்கிறார்கள்.
தமிழக மக்களின் ஆழ்ந்த பல நம்பிக்கைகளில் ராசியும் ஒன்று. பத்திரிகைகளில் வெளியாகும் ராசி பலன் இதற்கு சான்று. குறுக்கே பூனை கடந்து போனால் பலருக்கு பயணமே ரத்தாகி விடுகிறது. இப்படி ராசி பார்க்கும் நம்பிக்கை காலம் கடந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் கணேஷ் பாபுவின் கட்டிலின் ராசி அத்தகை ரகம் இல்லை. பர்மாவில் வணிகம் செய்து வாழ்ந்த காலத்தில், தாத்தா வளர்த்த தோதகத்தி மரத்தில் இருந்து செய்யப்பட்டது. அந்த கட்டில்தான் 3 தலைமுறையை உருவாக்கி ,வளர்த்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.அந்த கட்டிலுக்கு ஆபத்து என்றால்?
அந்த ஆபத்து எப்படி ,எதனால் வருகிறது என்பதை பிரபல எடிட்டர் பி. லெனின் கதையாக கொடுத்திருக்கிறார். திரைக்கதையும் அவரே.!புகழ் வாய்ந்த இயக்குநர் பீம் சிங்கின் மகன்.
சிறந்த நாவலுக்கான கருதான் ‘கட்டில்’. அதை படமாக்க விரும்பி, இறங்கி பல ஆண்டுகளை கடந்து வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் இ . வி. கணேஷ் பாபு.
நோக்கம் உயரியது,ஆனால் ‘கரப்ட் ‘ஆகிப் போன ரசனையின் மார்க்கெட்டில் தரம் உள்ள பொருள் எடுபடுமா?
நல்ல கதை . யதார்த்தமான நடிப்பு , நமது வாழ்வியல் ,வக்கிர மனம் ,துரோகம் ,எல்லாமே கட்டிலில் இருக்கிறது. ஆனால் கட்டில் என்றாலே காமத்தை தேடுகிறவர்களுக்கு எதுவும் இல்லை !!!
பிரபல ஓவியர் ஷ்யாம் ,சிறந்த நாவலாசிரியர் இந்திரா சவுந்திரராஜன் ,கே. பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம், கன்னக்குழி சிருஷ்டி டாங்கே ,விதார்த் ,இசை ஸ்ரீ காந்த் தேவா ஆகிய இத்தனை பிரபலங்களும் இயக்குநர் கணேஷ் பாபு, பி. லெனின் ஆகியோரின் படைப்பில் நம்பிக்கை வைத்து செயல்பட்டிருக்கிறார்கள்.
வாழ்த்துவோம். பாராட்டுவோம்.பாரதி பாடியதையும் நினைவு கொள்வோம்.
“நண்ணிய பெருங்கலை கள் – பத்து
நாலா யிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார். நெஞ்சு பொறுக்குதில்லையே “
—தேவிமணி