திருமணம், ராஜா ராணி போன்ற தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சித்து. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே,தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் பிரபலமான ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவர்களுடன் மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.
இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.
அகோரி படத்துக்கு ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.