நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சளி காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும், மேலும் 14 நாட்களுக்கு விஜயகாந்துக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்து வந்தனர்.
அரசியல் கட்சி தலைவர்களும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வந்தனர். தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் குணமடைய வேண்டி தொண்டர்களும் ரசிகர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வந்தனர்.
இதனிடையே விஜயகாந்திற்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின.
ஆனால் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, இதனை மறுத்தார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இ
ருந்து இன்று காலை வீடு திரும்பியதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் விஜயகாந்தின் கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரையுலகை சேர்ந்த அனைவருக்கும்,அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும்,தேமுதிக மாவட்டச் செயலாளர்களுக்கும்,கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் அனைவருக்கும் ,எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.