‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற இணைய தொடர் ‘ஓடிடி’ தளத்தில் வெளியாக உள்ளது. இந்த இணையத் தொடரை நக்கீரன் கோபாலின் மகள் பிரபாவதி தயாரித்திருக்கிறார். இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது.மேலும் வீரப்பனைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில், 6 எபிசோடுகள் கொண்ட இந்த இணைய தொடர் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த தொடரில் வீரப்பனின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்கள். இந்தத் தொடரில் வீரப்பனின் செயல்பாடுகள், அவர் செய்த நல்லது மற்றும் அவர் செய்த கொலைகள் மற்றும் அரசியல் என பல்வேறு விஷயங்கள் படமாக்கி இருக்கின்றனர்.இந்த இணையத் தொடரின் திரையிடல் சென்னையில் நடந்தது
இந்நிகழ்வில் நக்கீரன் கோபால் பேசியதாவது..
ஷாம், கௌஷிக் ZEE5 க்கு நன்றி ஏனென்றால் முதலில் நக்கீரன் என்றால் தைரியம் வேண்டும், அப்புறம் வீரப்பன் என்றால் இன்னும் தைரியம் வேண்டும். ஆனால் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார் ஆனால் மறுத்துவிட்டேன். இதற்காக நாங்கள் எங்கள் டீம் இழந்தது அதிகம். இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவன் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள். என் மகளுடைய டீம் அதைச் செய்துள்ளார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இதைத் தைரியமாக செய்த ZEE5 க்கு நன்றி. இது நக்கீரனின் 30 வருட உழைப்பு, எனக்கு வீரப்பனைப் பிடிக்கும் வீரப்பனுக்கு என்னைப் பிடிக்கும் ஆனால் எந்த இடத்திலும் நக்கீரன் வீரப்பனுக்கு ஆதரவாக ரிப்போர்ட் செய்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தான் நாங்கள் நின்றோம். வீரப்பனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பல கஷ்டங்களுக்கு பிறகு 1996 ல் அவரை வீடியோவில் கொண்டு வந்தோம். அதை அத்தனையையும் இவர்களிடம் தந்து இதைச் சரியாகக் கொண்டு வந்து விடுங்கள் என்று மட்டும் சொன்னேன். அதை மிகச் சரியாகச் செய்து விட்டார்கள். இதில் உழைத்த கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு நேரில் போய்ப் பல ரிசர்ச் செய்து, அந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும் ZEE5 க்கும் நன்றி.