பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹீரானியின் படங்கள் என்றால் விரும்பிப் பார்க்கக்கூடிய வித்தியாசங்கள் கதையில் இருக்கும். டங்கி எப்படி?
வன்முறை ,ரத்தக்களரி என போதைக்குள் தள்ளுகிற படங்கள் சென்னை பெரு வெள்ளமாக வந்து கொண்டிருக்கிற காலத்தில் காமடியாக கதை சொல்லியிருக்கிறார் .பொதி சுமக்கும் கழுதை நெடும்பயணம் போவதைப்போல சட்ட விரோதமாக இன்னொரு நாட்டில் குடி புகுவதை நகைப்புடன் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.
பஞ்சாபில் டங்கி என்றால் கழுதையாம்.
லண்டனில் குடியேறும் ஆசையில் சட்ட விரோதமான வழிகளில் பயணித்து அங்கு செல்கிறது ஒரு கோஷ்டி. ஷாருக் கான் தலைமையிலான அந்த கோஷ்டி படுகிற கஷ்ட நட்டங்களை உணர்வுப் பூர்வமாக ஹீரானி சொல்லியிருக்கிற படம் ‘டங்கி’ .
.இளமை,மூப்பு என இரு பருவ வேடங்களில் ஷாருக் கான். இவர் பாலிவுட் கமல்ஹாசன். துணிச்சலுடன் காரக்டர்களை எதிர் கொள்வார். இந்தப்படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார்.டாப்சியிடம் காதலை வெளிப்படுத்துகிற இடம் ,நீதிமன்றக் காட்சி இரண்டும் முத்திரை நடிப்புக்கு முத்தாரம் .நாயகியாக நடித்திருக்கிறார் டாப்சி. கதையின் தொடக்கமும் முடிவும் இவரே.! ஷாருக்கானுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.
பொம்மன் இரானி, விக்ரம் கோச்சார், அனில்குரோவர் மற்றும் ஸ்பெஷல் என்ட்ரி விக்கிகவுசல் ஆகியோர் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
மனுஷ்நந்தன், சி.கே.முரளிதரன், அமித்ராய் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான நிலப்பரப்புகள் மற்றும் உணர்வுகளைக் காட்சிகளிலும் கடத்தியிருக்கிறார்கள்.
ப்ரீதம் இசையில் பாடல்கள் அறுக்காமல் தென்றலாக செவி தடவுகின்றன. அமன்பந்தின் பின்னணி இசை அளவு.
பேராசையுடன் புலம்பெயர்பவர்களின் சிக்கல்களை ஹீரானி தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.பயணிக்கிற வழிகளில் இடைப்படும் சம்பவங்கள் ,அதற்கான குறியீடுகள் அதிர்ச்சி .
சில உண்மை நிகழ்வுகளின் புகைப்படங்களும் ஷாருக்கான் தலைமையில் நடந்துசெல்லும்போது மண்டை ஓடு உள்ளிட்ட உடலெலும்புகளும் கிடக்கும் காட்சிகள் உட்பட பல குறியீட்டுக் காட்சிகளும் அதிர வைக்கின்றன.
லண்டன் நீதிமன்ற விவாதங்களில் தங்கள் நாட்டுக்குள் பிற நாட்டினரை அனுமதிப்பதற்கு ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளை மாற்றியமைக்க கேட்பது அழுத்தமாக சொல்லப்படுகிறது.
இது சரிதானா என்கிற கருத்தில் இயக்குநர் டங்கியை கொடுத்திருக்கிறார்.
நல்ல படம் பார்க்கலாம்.
–தேவிமணி