பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட நடிகர்கள் ஐபிஎல் அணிகளையே வாங்கி பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் தற்போது அவர்களின் வழியை பின்பற்றி சென்னை கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியினர் ஏற்கனவே தியா, தேவ் என தங்களது குழந்தைகளின் பெயரில் 2டி நிறுவனத்தை தொடங்கி, திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகின்றனர். மேலும் கல்விக்காக அகரம் ஃபவுண்டேஷன் நடத்தி வரும் சூர்யா, தற்போது விளையாட்டுத்துறையிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி வந்த சூர்யா, தற்போது ‘ஸ்ட்ரீட் கிரிக்கெட் ப்ரீமியர் லீக் டி 10’ போட்டி விளையாட்டில் சென்னை அணியின் முதலாளியாக தான் மாறியிருப்பதை மகிழ்ச்சியோடு தனது எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல், பிபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் மூலம் டி20 போட்டிகள் பேமஸ் ஆனதை போல் சமீப காலமாக டி10 தொடர்களும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு பிரபலமாகி வருகிறது. அந்த டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி இருந்தனர்.இந்த நிலையில், ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் உரிமையாளர் யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.