சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு, கமல்ஹாசன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தை நோக்கி, கைகளை கூப்பி கணத்த இதயத்துடன் வணங்கினார். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “எளிமை, நட்பு, உழைப்பு மற்றும் பெருந்தன்மை ஆகிய அத்தனை வார்த்தைகளையும் சேர்த்து ஒரே மனிதருக்கு கூற வேண்டுமானால் அது சகோதரர் விஜயகாந்திற்கு மட்டுமே பொருந்தும். ஆரம்பத்தில் நான் இவரை பார்க்கும்போது எப்படி என்னிடம் பழகினாரோ, அதேமாதிரி தான் இவ்வளவு பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகும் என்னிடம் பேசினார்.இவரிடம் எந்த அளவிற்கு பணிவு இருக்கிறதோ, அதே அளவிலான நியாயமான கோபமும் இருக்கும். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கே வந்தார் என நான் நம்புகிறேன். இப்படிபட்ட நேர்மையாளர்களை இழந்து இருப்பது என்னை போன்ற ஆட்களுக்கு ஒருவித தனிமை தான். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு நான் செல்கிறேன்” என கமல்ஹாசன் கூறினார்.