தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெரு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபல நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இன்று காலை சென்னை திரும்பியுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நடிகரும் பொதுச் செயலாளருமான விஷால், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஆர்யாவும் சென்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது:“தமிழ் திரையுலகில் ஒரு மிக சிறந்த நடிகர். கலையுலகத்தில் மட்டுமல்ல பொது மக்களிடம் சிறந்த மனிதர் என்று பெயர் வாங்கிய ஒருவர். ஒரு நல்ல அரசியல்வாதி. விஜயகாந்தின் தைரியம், உழைப்பு ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து தான் நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.
விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் கேப்டன் (விஜயகாந்த்) மட்டும் தான். அவரது மறைவு அன்று நான் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. நான் அவரது கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை. விஜயகாந்த் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடத்தி இருக்க வேண்டும். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19-ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
வாழும்போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வெளியே 500-க்கும் மேற்பட்டோருக்கு நடிகர் விஷாலும், ஆர்யாவும் இணைந்து அன்னதானம் வழங்கினர்.