அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி, மூன்று ஆண்டுகளாகநடந்து வந்தது . இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி கருங்கற்களை கொண்டே இந்த கோவில் கட்டப்பட்டது.
நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது ஆகும். மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை என்பது கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது.பிரதமர் முன்னின்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்தார்.
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பாலராமர் சிலை முன்பாக கண்களை மூடி மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தியில் குவிந்தனர் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெகவுடா, உத்தர ப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பாபா யோகி ராம்தேவ், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத், ரஜினிகாந்த், விவேக் ஓபராய், தனுஷ், ஹேமமாலினி, மாதுரி தீக்ஷித், ரன்பீர் கபூர், ஆலியா பட், சிரஞ்சீவி, ராம் சரண், அனுபம் கெர், இந்தி கவிஞர் குமார் விஸ்வாஸ், பாடகர் சோனு நிகாம், முன்னாள் இன்னாள் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், சாய்னா நேவால், அணில் கும்ப்ளே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் அயோத்தி விழாவில் பங்கேற்றனர்
காலை 11.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். பட்டாடைகளை பாரம்பரிய முறைப்படி அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும், அவரோடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அலங்கரிக்கப்பட்ட ராமபிரான்: வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார். இதனைத் தொடர்ந்து பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது. கோயில் அர்ச்சகர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியார் பூஜைகளை செய்தனர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். மேலும், பல்வேறு அர்ச்சனைகளை செய்தனர். குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, பகவான் ராமருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காண்பித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் குழந்தை ராமரை தரிசித்து நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.