இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி (வயது 47.) இன்று மாலை 5.30 மணிக்கு காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றார்.
இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணி, சிகிச்சை பலனிளிக்காமல் இன்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பவதாரிணிக்கு வயது 47. பவதாரிணியின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பல பாடல்களை பவதாரிணி பாடியுள்ளார். மேலும் சிற்பி, தேவா ஆகியோர் இசையமைப்பிலும் சில பாடல்களையும் அவர் பாடியுள்ளார்
கடந்த 2001 ஆம் ஆண்டு ’பாரதி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ’மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடியதற்காக அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் சில படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’மாய நதி’ என்ற திரைப்படத்திற்கு கூட அவர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது