டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. “ அச்சமின்றி “ என்ற படத்தை வி.வினோத்குமார் தயாரித்து வருகிறார்.
விஜய்வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி நடிப்பில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் படத்தின் இசையமைப்பளார் பிரேம்ஜி பேசியதாவது…
விஜய் வசந்த் ஹீரோவாகவும், வினோத்குமார் தயாரிப்பாளராகவும் ஒரு படம் எடுக்க போகிறோம் என்று சொல்லும்போதே நான் தான் அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் எடுத்த இரண்டு படத்திற்கும் நான் தான் இசையமைத்தேன். இனி அவர்கள் எடுக்க போகும் படங்களுக்கும் நான் தான் இசையமைப்பேன். இது எங்களுக்குள் வாய் வார்த்தையில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம். என்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் காப்பியடித்து போட்டிருக்கிறேன் என்று பலர் பேசிக்கொன்டிருக்கிறார்கள். ஆமாம் நான் காப்பியடித்து தான் போட்டுக்கொண்டு கொண்டிருக்கிறேன். எனது பெரியப்பா ( இளையராஜா ) இசையமைத்த பாடல்களை தான் மாற்றி போட்டுக் கொண்டிருக்கிறேன். வேறு யாருடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் திருடவில்லை. எங்கள் குடும்ப சொத்தான ( இளையராஜா ) இசையிலிருந்து தான் திருடிப் போடுகிறேன். எல்லோருமே அவருடைய இசையிலிருந்து தான் மாற்றி பாடல்களை போடுகிறார்கள் நான் எடுத்து போடக் கூடாதா ?
என்னிடம் இயக்குனர்கள் நீங்கள் இளையராஜா போன்று இனிமையான ட்யூன் போட்டு தர வேண்டும் என்று கேட்பார்கள். நான் வரைப் போன்று டியூன் போட முடியாது. அவரைப் போன்று டிரெஸ் மட்டும் தான் போட்டுக் காட்ட முடியும். சொன்னபடி ஒருநாள் வெள்ளை ஜிப்பா, வேஷ்டி போட்டுக்கொண்டு ருத்ராட்ச மாலைகளையும் மாற்றிக்கொண்டு ஆர்மோனியப் பெட்டியுடன் போஸ் கொடுத்தேன். அதை போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள். பெரியப்பா வீட்டு வாசலிலும் ஒட்டிவிட்டார்கள். பெரியப்பா கூப்பிட்டு பேசினார்.. என்னடா என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பன்றியா என்று கேட்டார். அதற்கு நான் இல்லை பெரியப்பா உங்களைப் போல இசையமைக்க சொன்னார்கள் அது என்னால் முடியாது, வேண்டுமானால் அவரைப் போல டிரெஸ் போட்டு போஸ் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதைதான் போஸ்டர் போட்டு ஒட்டிவிட்டார்கள் என்று சொன்னேன் என்றார் பிரேம்ஜி.