தமிழ் திரையுலகில் கடந்த 1999 இல் விஜய் நடிப்பில் வெளிவந்த “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எழில். இந்நிலையில் “துள்ளாத மனமும் துள்ளும்” படம் வெளியாகி 25 வருடங்கள் ஆன நிலையில்,இந்நிகழ்வை எழில்25 விழாவாகவும், இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், விமல் நடிப்பில்,எழில் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தேசிங்குராஜா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரன் பேசுகையில்,
“கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரங்களில் நடக்கும் எந்த விழாவிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட கலந்து கொண்டு உடனே கிளம்பி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு கொள்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் எழில் கூப்பிட்டபோது மறுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு படப்பிடிப்பிலிருந்து சீக்கிரமே கிளம்பி வந்தேன்.
துள்ளாத மனமும் துள்ளும் படம் இயக்கிய காலகட்டத்தில் அவருடன் நான் பழகி இருக்கிறேன். வெற்றி பெற்ற சமயத்திலும் இடையில் தோல்விகளை கண்ட போதும் மீண்டும் வெற்றியை தொட்ட போதும் எப்போதுமே ஒரே மாதிரி பழகும் ஒரு நல்ல இதயம் கொண்டவர். என் மகன் விஜய் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல். இதுபோன்று ஒரு பத்து படங்கள் இருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை சொல்வதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி என்னிடம் இயக்குநர் எழிலை அனுப்பி வைத்தார். அவர் கதை சொல்லிவிட்டு அங்கே செல்வதற்குள்ளாகவே நான் போன் செய்து விஜய்யின் தேதிகள் எப்போது வேண்டும் என ஆர்.பி சவுத்ரியிடம் கேட்டேன்.
நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பா என்கிற எண்ணத்தில் கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண பப்ளிக்கின் மன நிலையில் தான் கதை கேட்பேன். ஒரு சின்சியரான உதவி இயக்குநரின் பார்வையில் சில கேள்விகளை கேட்பேன். அப்படி நான் கேட்ட கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்காக படத்தில் பதில் சொன்னவர் இயக்குநர் எழில். இத்தனை வருடங்களாக அவர் இந்த திரையுலகில் இருக்கிறார் என்றால், யார் ஒருவர் தாயை மிகவும் உயர்வாக மதிக்கிறாரோ அவரை கடவுள் உயரத்திற்கு கொண்டு செல்வார். இது என் வாழ்க்கையில் நான் பார்த்தது.
இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிவிடலாம். ஹீரோவுக்காக படம் ஓடி விடுவதால் நாம் பெரிய இயக்குநர் என நினைத்துக் கொள்கிறார்கள். மனதில் இருப்பதை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். படங்களை இன்னும் கதை சிறப்பாக திரைக்கதையுடன் பண்ணினால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற பக்குவம் இல்லை தைரியம் இல்லை. அதேபோல ஒரு கதை சொன்னதும் அந்த இயக்குநரை எழுந்து நின்று கட்டிப்பிடித்தேன் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்தான். ஆனாலும் துப்பாக்கி கதையைக் கேட்ட பிறகு ஒரு உதவி இயக்குநராக அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து ஒரு கேள்வியை கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர் என்னுடைய கேள்விக்கு படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது.
எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை துள்ளாத மனம் துள்ளும் கதை சொன்ன சமயத்தில் கேட்டபோது அந்த படத்தில் அதற்கான பதிலை சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது விஜய் என்ன பெரிய பெரிய சூப்பர் ஸ்டாரா ? இல்லையே.. அந்த கதை அவரை தூக்கிச்சென்றது. அந்தப் படத்திற்கு பிறகு தான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் அது சில்வர் ஜூப்ளி கண்டிருக்கும். காரணம் திரைக்கதை.
இளைஞர்கள் நல்ல கதையுடன் வாருங்கள். உங்களுக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஹீரோக்களை அப்படி வடிவமைக்க வேண்டும். காரணம் இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின் தொடர்கிறார்கள். படத்தில் ஒரு மூன்று நிமிடம் ஆவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என உங்கள் காலை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
விமல் ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை செய்து கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் மேலே கீழே என மாறியது. சினிமா என்றால் அப்படித்தான்.. சமீபத்தில் ஓடிடியில் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் சீரிஸ் பார்த்தேன். இவ்வளவு பெரிய நடிகனை சினிமா இப்படி விட்டு வைத்திருக்கிறது ? இவ்வளவு பெரிய நடிகரை நானே ஏன் இத்தனை வருடமாக விட்டு வைத்தேன் என வருத்தப்பட்டேன். அப்படி ஒரு நல்ல நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கிறார் எழில். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்”இவ்வாறு அவர் பேசினார்.