நன்றாக மென்று விட்டு ‘தூ ‘என துப்பி விடுவதுதான் சிக்லெட்ஸ்! சுவைக்கும் வரை ஜவ்வாக இழுப்பதுதான் இதான் குணம். மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்டால் இடுகாடு அல்லது சுடுகாடு.!
இந்த கதையின் ஒன் லைனும் அதுதான்.! இயக்குநர் எம். முத்து .
சாத்விக் வர்மா ,ஜாக் ராபின்சன் ,ரஹீம் ,இவர்களுக்கு இணையாக நயன் கரிஷ்மா ,அமிர்தார் ஹல்தார் ,மஞ்சீரா ஆகிய நடிகைகள். இவர்கள் ஏற்றிருக்கிற கேரக்டர்களை தமிழப் பெண்கள் செய்வார்களா என்பது சந்தேகம். ஆகவே மொழி தெரியாத பிற மாநிலப் பெண்கள். இவர்களுடன் ஸ்ரீமன், மனோ பாலா. “
இந்திப் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட ஸ்ரீமன்னின் புத்திரி, போரில் உயிர் நீத்த ராணுவ அதிகாரியின் விதவை பெண் வளர்த்த சீமந்த புத்திரி , அய்யங்கார் வீட்டு ஆசாரமான புத்திரி ,இந்த மூன்று புத்திரியரில் ஒருத்தி பருவம் அடைய வேண்டும் என்று தவித்து பின் குமரி ஆனவள். . மற்ற இருவரும் பருவத்தின் தினவை பார்த்து விடவேண்டும் என்று காண்டம் தெரிந்து கட்டில் பார்க்க துடிப்பவர்கள் . ஒருத்திக்கு சாக்லேட் பிளேவர் வெகு இஷ்டம்.! இந்த மூன்று குணக் குன்றுகளும் தங்களின் பாய் பிரண்டுகளுடன் ‘மேட்டர் ‘பண்ணுவதற்காக ரெஸ்டாரெண்ட் போய் பட்டுத் திருந்துவதுதான் கதை.
இரட்டை அர்த்த வசனங்கள் , நேரடியாக பேசும் பச்சைகள் என இச்சைகளை கொச்சையுடன் பேசுவது படத்தில் சிறப்பு.
“இஷ்டம் னா பாடு,இல்லேனா விடு” “மேட்டர் பண்ணுவோம்.” “கல்யாணத்துக்குப் பிறகு பண்ணுவதை முன்னதாகவே பார்த்துவிடுவோம். ” என்று மட்டுமல்ல இவைகளிலும் ‘சிறப்பாக’ பேசுவதையும் கேட்கலாம். நல்ல வேளை வசனங்களுடன் நிறுத்தியிருக்கிறார்கள் . பேசுவதுடன் அவைகளுக்கான காட்சிகளையும் படமாக்கவில்லை. லிப்லாக் மட்டும் உண்டு.
ஆம்பளைகள் மீதான ஆசையை மட்டும் காட்டினால் அவை சமூகத்துக்கு நல்லது இல்லை என்று பெரிய மனதுடன் திருந்துவதையும் காட்டுகிறார்கள்.
விஸ்கி ,பிராந்தி ,பீர் ,வோட்கா, பீடி சிகரெட் குடிச்சா குடல் வெந்து செத்துப் போவே என்று படம் போட்டுக் காட்டுவதால் அவற்றின் வணிகம் அற்றுப் போவதில்லை.
எல்லாம் சரி, இந்தப் படங்களின் புரமோஷன்களில் சிபாரிசு செய்து பேசிய பிரபலங்களான கே ராஜன் ,பேரரசு ஆகியோர் சமூக சேவகர்களா ? உருப்படும் யா சினிமா ?
இந்த சிக்லெட்ஸ் அப்படிதான் !
–தேவிமணி