“அந்த ராமசாமி இல்ல” என அழுத்தம் கொடுத்துச் சொன்னபோதே ஈரோட்டார் வெங்காயம்தான் என்று சுளீர் என நெத்திப் பொட்டில் அடி விழுந்தது.
மண்பானையை கடவுளாக்கி வணிகம் வளர்த்தார்கள் அந்த சிற்றூரில் .! கல்லில் சிலை வடித்து சாமியை கொண்டு வந்தால் என்ன,பானையில் கண் மூக்கு வரைந்து ஆத்தாளை கொண்டாடினால் என்ன ,சாமி தானே!!
பக்தியை காசாக்குவதில் நாயகன் சந்தானம் டாக்டரேட் வாங்கிய கில்லாடி . எந்த ரூபத்தில் எதிர்ப்பு வந்தாலும் அதற்கேற்றபடி தன்னை வளைத்துக்கொண்டு லாபத்தை அதிகமாக்கிக் கொள்வார். உள்குத்து தெரிந்து கொண்டு வந்த தாசில்தார் தனக்கும் பங்கு வேண்டும் என்று புதிய ஐடியா கொடுத்தார். சந்தானம் அண்ட் கோ மறுக்கவே தாசில்தார் சதி செய்ய இருவரும் முட்டிக் கொள்வதுதான் கதை.
நகைச்சுவை முக்கியம் தலைவரே என்பதில் சந்தானம் மிகவும் தெளிவாக இருக்கிறார். மற்றவர்கள் ஏறி அடிக்க ஸ்பேஸ் அதிகம் கொடுத்து தன்னை முக்கிய புள்ளியாக மாற்றிக் கொண்டு விளையாடி இருக்கிறார். மாறன் ,சேசு உள்ளிட்ட லொல்லுசபா ஆட்கள் தூள் கிளப்பியிருக்கிறார்கள். அட நம்ம நிழல்கள் ரவியும் பக்க காமடி பண்ணி இருக்கிறார். இவரது போர்ஷன் ரசனையோ ரசனை !!ராணுவ அதிகாரியாக அவர் செய்கிற காமடி கதைக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது.
கதைக்கு கால் உண்டா என்று பாட்டிகள் நம்மிடம் சொல்லி நிறைய கதைகளை அவிழ் த்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் இந்த படத்தில் வருகிற மெட்ராஸ் ஐ மேட்டரும் !.இயக்குநர் கார்த்திக் யோகி நம்மை எப்படியும் சிரிக்க வைத்தாகவேண்டும் என்று விரதம் இருந்து சீன் பிடித்திருக்கிறார்.ஆனாலும் நம்ப முடியாத ரம்பம்.!
நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.இவரும் ஒரு காமடி பீஸ்.!
,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, , நான் கடவுள் ராஜேந்திரன், ,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி எனப் படத்தில் கதிரறுப்பு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக்,
ஷான்ரோல்டன் இசை.
கிச்சு கிச்சு மூட்டாமலேயே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.அவ்வளவாக வதை இல்லை.
–தேவிமணி.