டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி.
வரும் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பைரி திரைப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி பேசும் போது…
பைரி என்பது ஒரு வகை கழுகு இனம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம் தான் பைரி. இந்த புறா பந்தய கதைக்களன் என்பது என் வாழ்வில் நான் பார்த்து வளர்ந்த வாழ்வியல் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. குறும்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே கேமராமேன் வசந்த் அவர்கள் எனக்குப் பழக்கம். என் குறும்படத்திலேயே உழைப்பைக் கொட்டி வேலை செய்திருப்பார். அவர் தான் இப்படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். இப்படம் உருவாவதற்கு அவர் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. எடிட்டிங் சதீஷ் செய்திருக்கிறார். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்தே சதீஷ் பழக்கம். தடம் புகழ் அருண் இசையமைத்திருக்கிறார்.. இப்படம் ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் சையது பிரதர். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்து அவர் எனக்கு பழக்கம். அவரால் தான் இப்படம் நடந்தது. அவருக்கு நன்றி. பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் படத்திற்கு பேருதவியாக இருந்து வரும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.
அதற்கு அடுத்ததாக இன்று இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் சக்தி சார் தான். அனைவருமே படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாலும் யாரும் அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. எந்தவிதமான சப்போர்ட்டும் கிடைக்காமல் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் சக்திவேலன் சார் இப்படத்தை பார்த்தார். புது இயக்குநர், புது டீம், ஆடியன்ஸுக்கு பரிச்சயமான நடிகர் நடிகைகள் இல்லை என்றெல்லாம் யோசிக்காமல் இப்படத்தை வாங்க அவர் முன் வந்ததால் தான் இன்று எங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட்பார்ம் கிடைத்திருக்கிறது. படம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். நீங்களும் படம் பார்க்கும் போது அதை உணருவீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன, 4 நிமிடத்திற்கு 75 இலட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் சிஜி சேகர் 35 நிமிடத்திற்கு சிஜி ஷாட்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறரர் என்பது சிறப்பு. அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை.
கார்த்திக் பிரசன்னா கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அவருக்கு நன்றி. மனோபன் முதலில் பாடல் ஆசிரியராகத் தான் உள்ளே வந்தார். பின்னர் படத்தில் எக்ஸிகுயூட்டிவ் புரொடியூஷர் ஆக மாறினார். பத்து நபர்கள் செய்யக் கூடிய வேலையை ஒற்றை ஆளாக செய்து காட்டினார். வசந்த் அண்ணன், சதீஷ், மனோபன், சிஜி ரமேஷ் இந்த நால்வரும் இப்படத்திற்கு மிக முக்கியம்.
அருண்ராஜ் மிகச் சிறப்பாக மியூசிக் செய்து கொடுத்திருக்கிறார். வில்லுப்பாட்டு பகுதிகளும் பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. அவருக்கு நன்றி. பைட் மாஸ்டர் விக்கி மாஸ்டர் மூன்று சிறப்பான சண்டைக்காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படம் சூப்பராக வந்திருக்கிறது. கண்டிப்பாக வெற்றியடையும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றிவிழாவில் சந்திப்போம் என்று உறுதியாகச் சொல்கிறேன். பத்திரிகையாளர்கள் படத்தைப் பாருங்கள். கண்டிப்பாக ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் செல்லும். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.பிடித்திருந்தால் ஆதரவு கொடுத்து தூக்கிவிடுங்கள், இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் துரைராஜ் பேசும் போது…
எல்லோருக்கும் வணக்கம். நான் பேச வேண்டியதில் பாதியை சையத்தும் மீதியை இயக்குநர் ஜான் அவர்களும் பேசிவிட்டார்கள் ஒன்று சொல்லலாம். சினிமாவையே பார்க்காத என்னை இவர்கள் ஒரு தயாரிப்பாளராக ஆக்கிவிட்டார்கள். சக்திவேலன் எங்கள் படத்தை நம்பி வெளியிட வந்திருக்கிறார்கள். அவருக்கு நன்றி. பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் இப்படத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.