கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே21 படத்திற்கு தற்போது அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. (ஏற்கனவே அமரன் என்ற தலைப்பில் கார்த்திக் நடித்த படம் 1992 -ல் வெளியானது குறிப்பிடத்தக்கது). சிவ கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்கிறார்கள்.
காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் போன்ற கதை களத்துடன் துப்பாக்கி சூடு, தாக்குதல் என இந்திய ராணுவம் எதிர்கொள்வதை இப்படத்தின் டீசர் விவரிக்கிறது. ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் முறுக்கேறிய உடல் கட்டுடன் கம்பீரமாய் தோன்றுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் 2024-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது .
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசரை பார்த்து விட்டு மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வெளியிட்டுள்ள பதிவில்,”அமரன் மை எட்டர்னல் ஒன் எனது கணவர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்து 10 வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகம் என்றுமே மறக்காது.
இப்படியொரு படத்தை எடுக்கிறோம் எனக் கேட்டபோது என்னால் மறுப்பு சொல்லவே முடியவில்லை. முகுந்த் எனும் ராணுவ வீரர் இந்த படத்தின் மூலம் மேலும் அறியப்படுவார். நாட்டுக்காக உயிரைக் கொடுத்த ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கான சமர்ப்பணமாக நிச்சயம் இந்த அமரன் இருக்கும் என நம்புகிறேன்.
உயிரிழக்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்கள் குடும்பத்திலும் வலிகள் நிறைந்திருந்தாலும், அவை எல்லாமே ஒரு உன்னத நோக்கத்திற்காக என எண்ணும் போது பெருமையடையத்தான் செய்வார்கள். ஜெய்ஹிந்த் “என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இப்பதிவை பார்த்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது,> இந்து மேடம் என்னையும் என் டீமையும் நம்பியதற்காக நிச்சயம் உங்களுக்கு எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன். ரொம்ப நன்றி என பதிவிட்டுள்ளார் .