முதலில் பைரி என்றால் என்ன என்பதை பார்த்து விடலாம்.
வானில் வெகு வேகமாக பறந்து செல்லும் புறாவை ,லாவகமாக மடக்கி கொத்தித் தின்னும் ஒரு வகை கழுகு . ராசாளி என்றும் சொல்வார்கள். பந்தயப் புறாக்களுக்கு வில்லனாக இருப்பவை , புறாப் பந்தயத்தை மையமாக வைத்து கதை உருவாக்கியிருப்பதால் வித்தியாசமாக இருக்கும் பைரி பெயரை சூட்டியிருக்கிறார்கள். வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள்.
கதைக்களம் நாகர்கோவில். ஒளிப்பதிவாளர் எ. வி . வசந்தகுமார் அப்பகுதி மக்களின் வாழ்வியலை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார். கோபமும் ,வெறியும் ,பாசமும் ,பயமும் வந்து வந்து போகின்ற கதையின் மாந்தர்களை பார்க்கிறபோது நமக்கும் பயம் ,கோபம் கலந்து அடிக்கிறது.
நாயகனாக சையத்மஜீத். படிப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு புறா பந்தயத்தை முன்னுக்குத் தள்ளி பெற்றவளை ஏமாற்றுகிறார். இயல்பாக செய்யவேண்டிய கேரக்டர். பல இடங்களில் மிகை நடிப்பு. இயலாமையை சினம் கலந்து சொல்வதால் ஏற்படுகிற விளைவுகளை படம் பிடித்துக் காட்டுகிற இயக்குநர் ஜான் கிளாடி கடிவாளம் போட மறந்திருக்கிறார் . இவரது நடிப்பும் மிகைதான் !
வீணாப் போனவனுக்கு பொம்பளை ராசி இருப்பதாக சொல்லுவார்கள். நம் படத்து நாயகன் சையத் மஜீத் மேக்னா எலனைக் காதலிக்கிறார். சரண்யாரவிச்சந்திரன் அவரை விரும்புகிறார்.ஆக கன்னி ராசிக்காரர்.! காதலி இருவரில் சரண்யாரவிச்சந்திரனின் இயல்பான காதல் மனதில் அமர்கிறது.
நாயகனின் அம்மாவாக வரும் விஜிசேகர் நல்வரவு . வில்லன் வினுலாரன்ஸ், சரியான தேர்வு. ஆனால் பாடி பில்டர் என்பதை முன்னிலைப் படுத்துவது போலிருந்தது நடிப்பு. ரமேஷ் ஆறுமுகம் பெரிய மனிதராக கவனிக்க வைத்திருக்கிறார்.
அருண்ராஜின் இசை,வட்டார மொழிக்கு துணை.
பைரி இரண்டாம் பாகமும் வரப்போகிறதுஎன்கிறார்கள் . இதற்கான காட்சியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது .
சின்ன சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் ஒட்டு மொத்த படம் உயர்வாகவே இருக்கிறது. நல்வரவு. புது முயற்சி.
–தேவிமணி