நடிகர் அஜித்குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்தின் 62-வது படமான இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. அங்கு 90 சதவீத படப்பிடிப்பை முடித்த படக்குழு, கடந்த மாதம் சென்னை திரும்பியது. இதையடுத்து எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் மீண்டும் அஜர் பைஜான் செல்ல படக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல அஜித் உள்ளிட்ட படக்குழு தயாராகி வந்தது. இந்நிலையில், தற்போது திடீரென நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அங்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அஜித் தரப்பில் விசாரித்த போது, அவரது உடலுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், அவர் எப்போதும் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் படப்பிடிப்புக்கு வெளிநாட்டு செல்லும் முன்பும் வழக்கமான பரிசோதனை செய்துகொள்வார். அந்தவகையில் தற்போது அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அடுத்த ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்கிறார்கள்.