பார்த்திபன் தான் இயக்கியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனது குருநாதர் கே.பாக்யராஜுக்கு செய்யும் மரியாதையாக ‘திரைபாக்கியம்’ என்ற பெயரில் நடத்த உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திரையுலகில் தனது திறமையால், எழுத்தால், உழைப்பால் இன்னும் சாதனைகள் புரிந்து வரும், பலரது மற்றும் எனது குருவாய் வாய்த்த மதிப்பிற்க்குரிய இயக்குனர் கே.பாக்யராஜின் திரைச் சாதனைகளுக்கு மரியாதை புரியும் வகையில்,நம் திரைத்துறை அன்பர்கள் – திரைச் சங்கங்கள் – கலை -இலக்கிய – ஊடக நண்பர்களின் சார்பாக ஒரு சந்தோஷ நிகழ்வு நிகழ்த்த விரும்புகிறேன்.உரிய சமயத்தில், ஒரு உயரிய கலைஞனை கவுரவிக்கும் அழகான மேடை அது. இவ்விழவை, தங்கள் வருகையும், வாழ்த்தும், ஈடுபாடும் இன்னும் மெருகேற்றும். அர்த்தமுள்ளதாக்கும். சங்க உறுப்பினர்களின் வருகையும் சந்தோஷப்படுத்தும்.நம் எல்லோரின் அன்பையும் வெளிப்படுத்த நான் முன்னெடுக்கும் இச்சிறு முயற்சிக்கு உங்கள் இனிய ஒத்துழைப்பு வேண்டும்.இவ்விழா நிகழ்வோடு ஒட்டிக்கொண்டு நிகழும் எனது, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரை இசைப் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியையும், வாழ்த்தி மகிழ்ச்சிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.