சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை புரட்சி கவி பாரதி “பாலகர்களுக்கு சொன்னானே தவிர மனிதர்களுக்கு சொல்லவில்லை” என்கிற நம்பிக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் மாறப்போவதில்லை “என்பதை அழுத்தமுடன் ‘அரிமாப்பட்டி சக்திவேல் ‘சொல்லியிருக்கிறார். பாரதியார் பாவம்.!
அரிமாப்பட்டி கிராமம் . நல்ல பேரு . அரிமா என்றால் சிங்கம்னு அர்த்தம். அந்த ஊரு கதையைத்தாம் சொல்லி இருக்கிறார்கள்.. சாதி விட்டு வேறு சாதிப் பெண்ணை கல்யாணம் செய்தால் உடனே ஊரை விட்டுப் போயிடனும். இல்லேன்னா செத்துப் போகணும். இந்த மாதிரியான கிராமத்தில பிறந்தவன் காதலிக்க முடியுமா?
ஒருத்தன் காதலித்து விட்டான் . கல்யாணமும் செய்து விட்டான். அவன் பேருதான் சக்திவேல். இவனால் அங்கு வாழ முடிகிறதா? எப்படிப்பட்ட இன்னல்களை சந்திக்கிறான். அப்பா சார் லியால் மகனை காப்பாற்ற முடிந்ததா? ஆனால் இப்படிப்பட்ட கிராமம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதை சொல்லி பாதிக்கப்பட்டவர்களின் போட்டோக்களையும் படம் முடிவில் காட்டுகிறார்கள். அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது தெரியவில்லை.
படத்தின் கதை,திரைக்கதையை எழுதி நாயகனாகவும் நடித்திருக்கிறார் பவன். தயாரிப்பாளரும் ஆவார். அறிமுகநடிகர் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. . பள்ளி மாணவர், திரைப்பட துணை இயக்குநர் என இரு வேடம். பயின்றால் பலன் கிடைக்கும்.
நாயகியாக மேக்னாஎலன். கிராமத்து அழகு. கதைக்கு பிளஸ் பாயிண்ட். இளவட்ட வயது என்பதால் இயல்பான காதல் எளிதாக வருகிறது.
சார்லி. அனுபவசாலி. அப்பாவாக வந்து வருந்துகிற காட்சிகள் அதிகம். நடிப்பிலும் ஓவர் தேம்பல்.
வில்லனாகவும் நடித்திருக்கும் பிர்லா போஸ் , பார்த்து ரொம்ப நாள் ஆச்சு . ரவுத்திரம் சூப்பர்.
மணி அமுதவனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
ஜெபி மேனின் ஒளிப்பதிவு, கதைக்களத்தையும் கதை மாந்தர்களையும் உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறது.
ரமேஷ் கந்தசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். பழகிய கதைதான் . ஆனாலும் பட்டி டிங் கரிங் பார்த்து புதிய மாடலைப் போல காட்டி விட்டார்.
—தேவிமணி