நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமானது சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இன்று பிற்பகல் 2 மணிக்கு சங்கத் தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், கார்த்தி, பூச்சிமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆயிரக் கணக்கான நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.அதே சமயம், ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மோதல்-கார்கண்ணாடி உடைப்பு!
இந்நிலையில், பொதுக் குழு கூட்ட அரங்கு அருகே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விஷால் ஏற்கனவே அறிவித்து இருந்ததால் போலீசார் உறுப்பினர் அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அடையாள அட்டை இல்லாத சிலர் பொதுக்குழு அரங்கத்தின் உள்ளே புகுந்தனர். இதனையடுத்து சங்க உறுப்பினர்களுக்கும், அவர்களைத் தடுத்த போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மோதலாக வெடித்தது இதையடுத்து போலீஸார்,பாதுகாப்பிற்காக நடிகர் சங்கத்தின் நுழைவாயிலை இழுத்து மூடினர். மேலும் அடையாள அட்டை இல்லாமல் கூட்டத்திற்கு வந்தவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த அமளியில் சங்க வளாகத்திற்கு வெளியே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர். அவர்களை கைது செய்யக் கோரி கருணாஸின் ஆதரவாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் 21 பேரைகைது செய்தனர்.அப்போது அங்கு சிறிது அமைதி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ,வாகை சந்திரசேகர்ஆ கியோரை நிரந்தரமாக நீக்குவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக விஷால் அறிவித்தார்.அப்போது சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய விஷால்,
இதற்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நடிகர் சரத்குமார் மற்றும் ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என அறிவித்தார். இதை விஷால் தரப்பினர் கைதட்டி வரவேற்றனர்.தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழாவும், ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவும், பொதுக்குழு அரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர் நூறு ஆண்டுகள் கடந்த மூத்த கலைஞர்களின் நினைவாக பல விருதுகளும் அளிக்கப்பட்டன .