தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும் ஜுன் மாதம் 4ம் தேதி நடத்தபட உள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்எஸ் சாந்து ஆகியோர் கூட்டாக இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியதாவது:- 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. விளவங்கோடு சட்டமன்றம் தொகுதிக்கும் அன்றே தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது.
முதல் கட்டம் – ஏப்ரல் 19 2 ஆம் கட்டம் – ஏப்ரல் 26 3 ஆம் கட்டம் – மே 7 4 ஆம் கட்ட தேர்தல் – மே 13 5 ஆம் கட்ட தேர்தல் – மே 20 6 ஆம் கட்ட தேர்தல் – மே 25 7 ஆம் கட்ட தேர்தல் – ஜூன் 1முதல் கட்ட தேர்தலுக்கு….. வேட்பு மனு தாக்கல்: மார்ச் 20 வேட்பு மனு கடைசி நாள்: 27 வேட்பு மனு பரிசீலனை : 28 திரும்ப பெற கடைசி நாள்: மார்ச்: 30 வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருக்கிறோம். தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். உலகமே இந்தியாவின் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. திருவிழா போல தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம்.
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் ஜூனில் முடிகிறது. பாரபட்சமற்ற தேர்தலை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. 1.5 கோடி அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளார்கள். நடப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலை விட 6 சதவீத வாக்களர்கள் அதிகம் ஆகும். ஆண் வாக்களார்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 1.82 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 11 மாநிலங்களில் தேர்தல் நடத்தியுள்ளோம். வன்முறை இன்றி அமைதியாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளிலும் அனைத்து தரப்பினரும் வாக்களிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்.
தன்னார்வலர்கள், வீல்சேர்கள், போக்குவரத்து வசதி போன்றவை செய்து கொடுக்கப்படும். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 % பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 82 லட்சம் பேர் உள்ளனர். 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.