ஒருவனின் சுய தேடலை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்கள்.
காசி என்றால் கங்கையும் ,கரையோர தகனங்களும் ,அகோரிகளும்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள்.
அங்கு அகோரிகளுடன் சுற்றித் திரிகிற நாயகன் விஷ்வக் சென்னின் தேடல் தன்னைப் பற்றிதான். ” நான் யார்?” தன்னை மற்றவர் தொட்டால் மின் அதிர்வு மாதிரி உணர்வு ஏற்படுகிறதே ஏன் ?
இதற்கான விடை ஒரு மூலிகையை இமயமலையில் தேட வைக்கிறது.
அந்த அதிசய மூலிகை அபூர்வக் காளான் ஆகும்.! 36 ஆண்டுகளுக்கு ஒருதடவை வளரக்கூடியது. விஷ்வக் சென்னுக்கு பக்க பலமாக சாந்தினி சவுத்ரி. ஆய்வாளர். இருவரும் தேடுதல் பணியில் இருக்கும்போது பல ஆபத்துக்கள்.இதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே ‘காமி.; ( தெலுங்கு சொல் )
நாயகனாக நடித்திருக்கும் விஷ்வன் சென், மருத்துவராக நடித்திருக்கும் சாந்தினி செளத்ரி, சிறுமி ஹரிகா பெட்டா, சிறுமியின் அம்மாவாக நடித்திருக்கும் அபிநயா, ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன், என படத்தில் நடித்திருக்கும் அனைவரும், கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மூன்று நிலையிலிருந்து கதைகள் சொல்லப்பட்டாலும், மூன்று கதைகளுக்கும், மூன்று கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பதை, நம்மால் யூகிக்க முடியாத, சாகசம் நிறைந்த திரைக்கதை வழியாக ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர், வித்யாதர் ககிடாவும், பிரத்யூஷ் வத்யமும். கிளைமாக்ஸ் வரை நிச்சயம் யாராலும் யூகிக்க முடியாதபடி இருப்பது தான் படத்தின் பலம்.
அடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் VFX காட்சிகள் தான். இமயமலைப் பயணத்தையும், அதில் ஏற்படும் ஆபத்துக்களையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
விஷ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு, நரேஷ் குமரன் பின்னணி இசை, இரண்டும் சிறப்பு!
ஒரு சில குறைகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் பார்க்கலாம்.
–தேவிமணி