ரஜினி நடித்த லிங்கா திரைப்படத்தை தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். ரஜினி 4 வருடங்களுக்குப் பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான திரையரங்குகளில் சராசரியாக ரூ 250 முதல் 300 வரை டிக்கெட் விற்கப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என மூன்றாவது நாளிலிருந்தே குரல் எழுப்பத்தொடங்கினர் சில விநியோகஸ்தர்கள். குறிப்பாக படத்தை வாங்கி வெளியிட்ட ஒருவர் படம் செத்துவிட்டது என்றெல்லாம் கூறினார். இந்தப் பிரச்சினையை தொடர்ந்து சில விநியோகஸ்தர்கள் ஓன்று கூடி உண்ணாவிரதம் போன்ற முயற்சிகளில் இறங்கினர் மேலும் ,இப்பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தங்களுக்கு நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் லிங்கா படத்தால் உண்மையிலேயே நஷ்டமா என்று கணக்குப் பார்க்க ரஜினிகாந்த பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியத்தை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் விநியோகதர்களிடம், அதற்க்கான ஆதாரங்களை கேட்டுள்ளாராம். கோவை ஏரியாவின் விநி யோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் முன்பு பாபா, குசேலன் பிரச்சினைகளின் போது ரஜினிக்கு உதவியாக இருந்து .தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்ட பணத்தை திரும்ப கிடைப்பதற்கு உதவியது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே அதிக நஷ்டம் அடைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓரளவு தொகையை திரும்பத் தர நடிகர் ரஜினிகாந்த முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து ரஜினி தரப்பு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை