மதுவுக்கு இதுவரை யாரும் வைத்திராத பெயர் , கடுமையான -கொடுமையான நஞ்சு.
பாற்கடலை கடைகிற போது வாசுகி பாம்பு கக்கிய மோசமான ,தீங்கான நச்சு -நஞ்சு !
ஆலகாலம் என்கிற பெயருடன் வெளியாகிய படம் வழக்கம்போல மதுவைக் குடித்து நாசமாகும் சாதாரணன் குறித்த படம். நல்ல கருத்துதான்.
வசந்த மாளிகை தவிர்த்து குடிப் பழக்கத்தினால் நாசமான பணக்காரனைப் பற்றிய திரைப்படம் ஏதாவது வந்திருக்கிறதா,என்றால் இல்லை. ஏழைகள்தான் பாதிக்கப் படுகிறார்கள் என்கிற கருத்து இந்த படத்திலும் திணிக்கப்பட்டிருக்கிறது
ஆக வழக்கம்போல இந்தப் படத்திலும் ஆலகாலத்துக்கு இரையாகிறது ஏழை விதவைத் தாய் ஈஸ்வரி ராவின் சிறு குடும்பம்.
ஈஸ்வரிராவின் மகன் ஜெயகிருஷ்ணா ( இவர்தான் இயக்குநர்.) கல்லூரியில் காதல் அரும்ப சினிமா இலக்கணப்படி சக மாணவ விரோதம்.அப்பாவியான இவர் மதுவுக்கு அடிமையாவதுதான் உலக மகா சோகம். காலை இழந்ததற்குக் காரணமே மது தான் என்பது நன்றாகத் தெரிந்தும் திரும்பத் திரும்ப அந்த நஞ்சினை நாடுவது ,ஜெய கிருஷ்ணா மீது அனுதாபம் பிறக்கிறது என்றாலும் வெறுப்பும் வருகிறது.
காட்சிகளில் சோகம் இயல்பாக இல்லை. திணிக்கப் பட்டிருப்பதால் !இயக்குநரே நாயகனாக நடிப்பதால் தனக்கு அனுதாபம் தேடி அத்தகைய கனமான காட்சிகளை வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
நாயகியாக சாந்தினி. அனுதாபம் வருகிறது. இவர் அப்படி என்ன செய்யாத தவறை செய்துவிட்டார் என்று இவரின் குடும்பம் தள்ளி வைக்கிறது? மகள் ‘மாசமாக இருக்கிறாள்’ என்பது ஒவ்வொரு தாய்க்கும் வரம் அல்லவா ,!சாந்தினியின் அம்மா சிற்றின்ப பிரியையோ ?
இளம் வயது ஈஸ்வரிராவ் முதுமையிலும் அதே இளமை . சோகமான அம்மா கிளைமாக்ஸில் தீக்கொளுத்தியாக மாறி சாராயக் கடையை எரித்து தானும் சாம்பலாகிறார். உடன் ‘கட்டை ‘ குடியால் மடிந்த மகனும்.!
டாஸ்மாக் கடை என்று சொல்லுவதற்கு பயந்து பெயரை மதுபானக்கடை என்பதாக எழுதி தீ வைத்திருக்கிற துணிவு?
கோடை கால தீ விபத்து.!
––தேவிமணி .