இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய
4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால், விடுதலையான பின்பு தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்
. இவர்களில் உடல்நலக்குறைவு காரணமாக சாந்தன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் நளினியின் கணவர் முருகன், லண்டனில் உள்ள மகளுடன் வசிப்பதற்கு ‘விசா’ எடுக்க, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குனரிடம் விண்ணப்பித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்தது. 3 பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை தேவையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்த, திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதை அடுத்து திருச்சியில் பலத்த பாதுகாப்புடன், முருகன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூன்று பேர் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு முறையான பாஸ்போர்ட்டுகள் போன்ற ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை சோதனை முன்னதாகவே நடத்த வேண்டியது இருந்தது எனவே என்று
காலை 6 மணிக்கெல்லாம் பலத்த பாதுகாப்புடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள் பகுதிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.அதன் பின்பு சென்னை சர்வதேச விமான நிலைய குடியுரிமை பிரிவில் தனி கவுண்டரில் எந்த மூன்று பேருக்கும் விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவைகள் நீண்ட நேரமாக நடந்தன. அப்போது அந்த கவுண்டர் பகுதியில் வேறு பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை சோதனை அனைத்தும் முடிந்த பின்பு, இவர்கள் மூன்று பேரும் விமான நிலையத்தின் உள்பகுதியில் தனியாக பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தனர்.
அதன்பின்பு அந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானதும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பலத்த பாதுகாப்புடன் மூன்று பேரையும் அழைத்து சென்று விமானத்தில் ஏறி அமர வைத்தனர். இவர்கள் மூன்று பேரும் இவர்களின் வழக்கறிஞர் ஒருவரும் இலங்கைக்கு செல்கிறார். அதன் பின்பு இந்த விமானம் இன்று காலை
10.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.
இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கு அதோடு சம்பந்தப்பட்ட விவாகரங்கள் நீடித்துக் கொண்டே வந்த நிலையில், இன்றுடன் அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டது.முன்னதாக கணவர் முருகனை வழியனுப்புவதற்காக, நளினி மற்றும் அவரது உறவினர்கள் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.
*