உலகநாயகன் கமல்ஹாசனின் சிவப்பு ரோஜாவை ( ரெட் ரோஸ் ) மனதில் இருத்திக்கொண்டு இந்த ஒயிட் ரோஸ் வந்திருக்கிறது.
இதுவும் திரில்லர் ,சைக்கோ கிரைம் . படம் ரெட் ரோஸ் அளவுக்கு இருக்குமா ?
விஜித், கயல் ஆனந்தி தம்பதிக்கு, ஒரு பெண் குழந்தை. போலீஸ் என்கவுன்டரில் எதேச்சையாக சிக்கி உயிரை உயிரை விடுகிறார், விஜித்.
கணவரை இழந்த அவருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படவே, தோழியின் உதவியோடு பாலியல் தொழிலாளியாக மாறுகிறார். பாலியல் தொழிலின் முதல் நாள், பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஆர்கே சுரேஷிடம், கயல் ஆனந்தி மாட்டிக்கொள்கிறார். ஆனந்தி தப்பித்தாரா, இல்லையா? இதுதான் ஒயிட் ரோஸ்.
ஒயிட் ரோஸ் எழுதி, இயக்கியிருப்பவர் கே.ராஜசேகர். வில்லன் ஆர். கே. சுரேஷை திருப்தி படுத்தவேண்டும் என்பதற்காக திரைக்கதையை அமைத்திருப்பார் போலும். பொறியியல் படித்தவராக காட்டப்படும் ஆனந்தி, பாலியல் கொடுமையில் ஈடுபடுகிற அளவுக்கு சேமிப்பு இல்லாதவரா ,?அட போங்கப்பா ! சத்திரத்தில் படுத்துத் தூங்கினால் சாமியார் கனவுதான் வரும்.!
கயல் ஆனந்தி தனது கேரக்டரை சிறப்புடன் கையாண்டுள்ளார். ஆர்கே சுரேஷிடமிருந்து அவர் தப்பிக்க போராடும் காட்சிகளில், பயத்தையும், பதற்றத்தினையும் ஒரு சேர ரசிகர்களிடம் கடத்திவிடுகிறார்.
அவர் கடத்திய பயமெல்லாம் கடைசியில் நம்மிடம் பதுங்கிவிட்டது.
–தேவிமணி