கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் சிவ குமார் , சூர்யா , இயக்குநர் ஞானவேல் , அசோக் செல்வன் , நிவாஸ் கே பிரசன்னா , இயக்குநர் ராஜு முருகன் , இயக்குநர் தரணி , இயக்குநர் ராதா மோகன் , ஆர்ட் டைரக்டர் கதிர் , பால சரவணன் , ஆர்ஜே பாலாஜி , கேமரா மேன் பிரமோத் , எடிட்டர் லியோ ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசியது , கூட்டத்தில் ஒருத்தன் எனக்கு மிகவும் பிடித்த கதை களம் கொண்ட மிகச்சிறந்த திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் ஞானவேல் எங்கள் குடும்ப நண்பர் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கூட சொல்லலாம். ஞானவேல் அவர்கள் திரைப்படம் உருவாக்கும் கலை நன்கு பயின்றவர். அவருடைய படத்தை தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிவாஸ் பிரசன்னா அவருடைய இசையால் எங்களை ஆச்சரிய படுத்தினார். அவருடைய இசை இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாகும் என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள்.
விழாவில் நடிகர் சிவ குமார் பேசியதாவது, ‘இப்படத்தின் தயாரிப்பாளர் மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர் கார்மெண்ட்ஸ் துறையில் வேலை பார்த்து இப்போது சிறந்த தயாரிப்பாளராக மாறி மாயா , ஜோக்கர் , காஷ்மோரா போன்ற மிக சிறந்த படைப்புகளை தயாரித்து வருகிறார். என்னால் தான் படித்து பட்டம் வாங்க முடியவில்லை , என் மகனையாவது படித்து பட்டம் வாங்க வைக்கவேண்டும் என்று எண்ணி சூர்யாவை படிக்க வைத்தேன் அவர் இன்று B.com பட்டதாரி. படித்து பட்டம் வாங்கி என்னுடைய வயித்தில் பாலை வார்த்துவிட்டார். அவர் படித்து முடித்த பின்பு முதன் முதலில் அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூரில் வேலைக்கு செல்வார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் அவர் என்னுடைய மகன் என்று தெரியாது. 6 மாதம் கழித்து அவர்களுக்கு தெரிந்த பின்பு அவர் வேலையை விட்டு வெளியே வந்துவிட்டார். அப்படி இருந்து கடுமையாக உழைத்த அவர் இன்று அதைவிட கடுமையாக உழைத்து நாயகனாக மாறி வெற்றி பெற்று இருக்கிறார். அவர் திரையில் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. கூட்டத்தில் ஒருத்தன் இயக்குநர் ஞானவேல் என்னை முதன் முதலில் பேட்டி காண வந்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இன்று அகரம் குழுமத்தின் அரங்ககாவலராக இருந்து வருகிறார். இன்று திறமைமிக்க அவர் இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் பூஜை மருந்தீஸ்வரர் கோவிலில் காலை 4மணிக்கு நடந்தது அதில் நானும் கலந்து கொண்டேன். எஸ்.ஆர்.பிரபுவை போல் ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடித்து நல்ல படத்தை இயக்கியுள்ள ஞானவேலுக்கு வாழ்த்துக்கள் என்றார் சிவகுமார்.