“நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஆனையூரில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
“இங்கு நம்மவர் வருகிறார், நல்லவர் வருகிறார் என்று நோட்டீஸ் அடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நல்லவர் என்ற பட்டம் ஒரு ஆளுக்கு மட்டும் சொந்தமல்ல. வேட்பாளர் சு.வெங்கடேசன் நம்மவர் மட்டுமல்ல, நல்லவரும்தான். நான் வருகிறேன் என்று நோட்டீஸ் அடித்திருந்தார்கள், இவர் வர வேண்டும் என்று நான் நோட்டீஸ் அடிக்கிறேன்.
இங்குள்ள மலைச்சாமிபுரத்தில் வட அமெரிக்க கமல் நற்பணி மன்றம் சார்பில் நம்மவர் படிப்பகம் அமைத்துள்ளோம். அது எங்களுக்குப் பெருமை. நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று தீர்மானித்தேன் என்றால், நல்லது செய்ய வேண்டும் என்றால்கூட அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனைதான். அரசியல் ஒரு பலம். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டுதான், நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இவர் வந்த காரணமும் அதுதான்.
வழக்கமாக அரசியலுக்கு ஏன் வந்தீர்கள், முதல் கையெழுத்து என்ன போடப் போகிறீர்கள் என்று கேட்பார்கள். நான் புதிய அரசியல் நாகரிகத்தை உருவாக்க வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொள்வேன். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. இனி நாம் செய்யப்போவதையும், செய்து இருப்பதையும்தான் சொல்வேன். செய்யத் தவறியவர்களின் குற்றங்களைப் பட்டியலிடுவது நேர விரயம். நவீன அரசியல் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது. ஒருவரையொருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீடுகூட கிடைக்காத நேரத்தில், பல நற்பணிகளைச் செய்திருக்கிறார் சு.வெங்கடேசன். அவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. இந்த வட்டாரத்துக்கு நீங்கள் செய்யும் நன்மை அது.
காவல் கோட்டம், வேள்பாரி போன்ற முக்கியமான நாவல்களை எழுதிய நல்ல எழுத்தாளர் என்பதைவிட, கிராமங்களுக்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியமானது. அவர் செய்த நற்பணிகளைத் திரட்டி, வீடியோ ஆவணம் உருவாக்கியிருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்குக் கிடைத்தது. இப்படி, தான் செய்த விஷயங்களைப் பட்டியல்போடும் நேர்மையும், நிமிர்வும் அவருக்கு இருக்கிறது.
அதுமட்டுமல்ல, தோழர் சு.வெங்கடேசன் ரூ.300 கோடிக்கு மேல் கல்விக் கடனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். பலருக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். இவருக்கு கீழடி நாயகன் என்று பட்டமே இருக்கிறது. சிறந்த நாடாளுமன்றவாதி. பிரதமர் மருத்துவ நிவாரண நிதியை மக்களைச் சென்றடையச் செய்ததில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர்.
மதுரை என் மீது காட்டிய அன்பு மறக்க முடியாதது. அது இன்னும் நீள வேண்டும். மதுரையையும் வீரத்தையும், பாசத்தையும் பிரிக்க முடியாது. அதுபோல, மதுரையையும் திமுகவையும் பிரிக்க முடியாது. மதுரையையும் கமலையும் பிரிக்க முடியாது.
மதுரையை நவீன நகரமாக மாற்றிய பெருமை கலைஞரைச் சேரும். இதை மாநகராட்சியாக தரம் உயர்த்தினார். உயர் நீதிமன்றத்தின் கிளையை இங்கே தொடங்கிவைத்தார். புகழ்மிக்க பாலங்கள், மதுரையை நவீன நகரமாக மாற்றியது. கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் என மதுரையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களும் ஏராளம். அதனால்தான் திமுகவையும், மதுரையையும் பிரிக்க முடியாது என்றேன். தொடர்ந்து தொண்டு செய்தவர்களையும், மக்களையும் பிரிக்க முடியாது.
உலகிலேயே எங்கும் இல்லாத விளையாட்டு ஜல்லிக்கட்டு. அதன் தலைநகரம் அலங்காநல்லூர். அதை அகில உலக ஜல்லிக்கட்டின் தலைநகரம் என்றால் அது மிகையாகாது. இன்னும் கொஞ்ச நாளில் உலகம் முழுவதும் விளையாடும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறிவிடும்.
எங்களுக்குச் சேர வேண்டிய நிதியில் கொஞ்சம் கொடுங்கள் என்றாலே, அதைக் கொடுக்க மறுக்கிறார்கள். கீழடியின் கலாச்சாரம் என்பது மதுரை, தமிழகத்தின் கலாச்சாரம் மட்டுமல்ல, அது மனிதர்களின் கலாச்சாரம், உலகக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற அமைச்சர் உதயநிதி முயல்கிறார். அவரது முயற்சி வெற்று பெறும். நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் என்னவாகும் என்று சொல்லியிருக்கிறேன். சு.வெங்கடேசனைப் போன்றவர்கள் கையில் அரசியல் பலத்தைக் கொடுத்தால், ரயில் சரியான நேரத்துக்குப் போய்ச்சேரும், தாகம் தீரும், அனைவருக்கும் கல்வி கிடைக்கும். கல்விதான் நமது பலம். நம்மைப் பிரிப்பதற்கு பல சக்திகள் இருக்கின்றன.
காந்தியார் தனது சட்டையைத் துறந்தது மதுரையில்தான். இங்கே நாம் செய்துகொண்டிருக்கும் நல்லவைகள் நாடெங்கும் பரவ வேண்டும் என்பதுதான் என் ஆசை. மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம். பெண்கள் தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் என தமிழ்நாட்டில் திமுக செய்தவைகள் ஏராளம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். நல்ல அரசியல் இருப்பதால்தான் இது சாத்தியமாகியுள்ளது.
குஜராத், உத்தர பிரதேசம், மேங்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க முடிந்த உங்களுக்கு, இங்கே ஏன் உருவாக்க முடியவில்லை? செங்கலைக் காட்டியதும், கட்டாத கட்டிடத்தின் அஸ்திவாரம் ஆடிப்போனது. பிற மாநிலங்களில் அத்தனை பணிகளையும் நிறைவு செய்துவிட்டு, தமிழகத்துக்கு ஒரவஞ்சனை செய்வது ஏன்? அண்ணா சொன்னபடி, தமிழகம் தேய்ந்துகொண்டுதான் இருக்கிறது. அது தேயாமல் இருக்கும் கேடயமாக சு.வெங்கடேசன் போன்றவர்கள் இருக்கிறார்கள். நல்லவை தொடர வேண்டும் என்றால், இவருக்கு வாய்ப்புக் கொடுத்தே தீர வேண்டும். மதுரைக்கு கிடைக்கும் லாபம், எனது லாபம். இப்படி நினைத்தால்தான் நாளை நமதாகும்”. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
தொடர்ந்து, புதூர் பேருந்து நிலையம் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.