Romeo Movie Review‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம், ரோமியோ. இப்படத்தில் விஜய் ஆண்டனி, மிருனாளினி ரவி இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். கதை எழுதி, இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன்.
‘மொரட்டு ரொமான்ஸ், மில்க் & விஸ்கி’ என்ற கேப்ஷனுடன், மிருனாளினி ரவி கையில் மது பாட்டிலுடன் காணப்பட்ட, ’ரோமியோ’ படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. அதைத் தொடர்ந்து சில சர்ச்சைகள். இது ஒரு புறம் இருக்க.! இதுவரை, இறுக்கமான கதைகளில் மட்டுமே தன்னை முன்னிலைப் படுத்தி நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு மட்டும் இந்தப்படம் புதிதல்ல. அவரது ரசிகர்களுக்கும் புதிது தான். எப்படியிருக்கிறது? ரோமியோ, பார்க்கலாம்.
வெளிநாட்டில் சம்பாதித்த விஜய் ஆண்டனி, திருமண வயதைத் தாண்டிய நிலையில், சொந்த ஊரில் செட்டிலாக விரும்பி, ஊர் திரும்புகிறார். அவரது பெற்றோர்கள் திருமணம் குறித்து பேசும்போது, அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தனது மனதுக்கு பிடித்த பெண்னை, காதல் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். இந்நிலையில், சென்னையிலிருந்து விஜய் ஆண்டனியின் ஊருக்கு வரும், மிருணாளினி ரவியைப் பார்த்தும் காதல் கொள்கிறார். இதை தெரிந்து கொள்ளும் அவரது பெற்றோர்கள், மிருணாளினி ரவிக்கும் விஜய் ஆண்டனிக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். சினிமாவில் சாதிப்பதை லட்சியமாக கொண்டிருக்கும் மிருணாளினி ரவிக்கு, இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. விஜய் ஆண்டனியிடம் இருந்து பிரிந்து, தனது லட்சியக் கனவினை நோக்கி பயனிக்க முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ரோமியோ படத்தின் கதை.இதுவரை சாதுவான, இறுக்கமான, ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி, இதில் காதல் கதாநாயகனாக களமிறங்கியிருப்பதுடன், ‘அறிவு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தியிருக்கிறார். காதலும், நடனமும் நன்றாகவே வருகிறது.
மிருணாளினி ரவி, அவருக்கு கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம். நடிப்பதற்கு பல காட்சிகள் கிடைத்திருக்கிறது. அதை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நடித்திருக்கிறார்.
யோகி பாபு, விஜய் ஆண்டனியின் காதலுக்கு ஐடியா கொடுப்பதுடன், அவரையே கலாய்த்து, ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறார், சில காட்சிகளில். இது தவிர, மிருணாளினி ரவியின் சினிமாத் தோழர்களாக வரும் ஷாரா உள்ளிட்டவர்கள், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா ஆகிய்யொ கதைக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
கலர்ஃபுல்லான ஒளிப்பதிவின் மூலம், அனைத்துக் காட்சிகளையும் அழகுற படம்பிடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷா.
அறிமுக இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில், பாடல்கள் பரவாயில்லை! பின்னணி இசையில் குறையில்லை..
கனவு, லட்சியம், விருப்பமில்லாத திருமணம் இதுபோன்ற கதையம்சம் கொண்ட பல படங்கள் வந்திருப்பதால் ஒரு சின்ன ஏமாற்றம். திரைக்கதையில் ஏற்படும் தொய்வுகளை சரி செய்து, படத்தின் நீளத்தினை குறைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப்படத்தில் எடிட்டராக பணியாற்றிய விஜய் ஆண்டனிக்கு, இது தெரியாதா!?
மொத்தத்தில், ‘ரோமியோ’ (அறிவு) விஜய் ஆண்டனி வசீகரிக்கவே செய்கிறார்.!