தனியார் வங்கி ஒன்றில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிகின்றார் விஜய். வாராக் கடன்களை வசூலிப்பதில் கில்லாடி இவர். இவரின் நண்பர் சதீஷ். இருவரும் யாருமில்லா அனாதைகள்.ஒரே அறையில் வசிக்கும் நண்பர்கள். வங்கி மேலாளர் ஒய்ஜி மகேந்திரனின் மகளும் கீர்த்தி சுரேஷூம் நெருங்கிய தோழிகள். தோழியின் திருமணத்திற்காக நெல்லையில் இருந்து சென்னை வரும் கீர்த்தி சுரேஷ் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அந்த பிரச்சனையில் இருந்து கீர்த்தி சுரேசை காப்பாற்றுகிறார் விஜய். முதல் சந்திப்பிலேயே அவரை காதலிக்கிறார் விஜய். இந்நிலையில் நெல்லை செல்லும் கீர்த்தியிடம் தன காதலைச் சொல்ல பஸ் நிலையம் செல்கிறார் விஜய். அங்கு கீர்த்தியை ஒரு கொலைகார கும்பல் கொல்ல முயல்கிறது. அவர்களிடம் இருந்தும் கீர்த்தியை காப்பாற்றும் விஜய், அந்த கொலைகார கும்பல் பற்றி கீர்த்தியிடமே கேட்கிறார். கீர்த்தி சொல்லும் விசயங்கள் ஒவ்வொன்றும் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்த, கீர்த்திக்கு ஆதரவாக விஜய் களமிறங்குகிறார். இதையடுத்து என்ன நடக்கிறது? என்பதே பைரவா திரைப்படத்தின் மீதிக்கதை.
தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும்,பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட தனியார் மருத்துவக்கல்லூரி முதலாளிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.ஆனால்,வலுவில்லாத திரைக்கதையால், விஜய்-ஜெகபதிபாபு,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும், முயற்சியும் வீழலுக்கு இறைத்த நீராகவே வீணாகி விடுகிறது! விஜய் சண்டைக்காட்சிகளில் ஜொலிக்கிறார்,’இப்ப நிறைய பேருகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு… அது சொன்ன சொல்லை காப்பாத்துறது’..என்ற பஞ்ச் வசனமும், கசாப்புக் கடையில ஆடு வெட்ட ஆரம்பிச்சு, காசுக்காக ஆளவெட்டி கல்லூரி ஆரம்பிச்சு, கல்வி தந்தை, கல்வி வள்ளல்லுன்னு உனக்கு நீயே பேரை போட்டுக்கிட்டு பண்ற கூத்தெல்லாம் எனக்குத் தெரியும் என்ற விஜய் பேசும் வசனம் ‘டுபாக்கூர்’ கல்வித் தந்தைகளுக்கு சரியான சவுக்கடி! கபாலி ரஜினியின் ‘மகிழ்ச்சி’ வசனம் மாதிரி இதில் ‘சிறப்பு’, ‘மிகச்சிறப்பு’ என்றபடி விஜய், ரஜினி ரூட்டை பாலோ செய்திருப்பது ரசிக்க வைக்கிறது.திருநெல்வேலி மலர் விழியாக கீர்த்தி சுரேஷ் செம கச்சிதம். சுகுமாரின் ஒளிப்பதிவு டாப்! நகைச்சுவை என்ற பெயரில் சதீஷ் அடிக்கும் லூட்டி மகா எரிச்சல்.தம்பி ராமையா வீணடிக்கப்பட்டிருக்கிறார்.டேனியல் பாலாஜி கச்சிதம்! ஸ்ரீமன்,ஹரீஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், மாரிமுத்து, சண்முகராஜன், வைஷாலியாக வரும் புதுமுகம்,தங்களது பங்கை நிறைவாக செய்துள்ளனர். கவியரசு வைரமுத்துவின் கவிதை வரிகளுக்கு சந்தோஷ் நாரயணன் இசை, மற்றும் பின்னணி இசை இரைச்சல். எந்த பாடலும் நினைவில் நிற்க மறுக்கிறது. படம் முழுவதும் ஆங்காங்கே பல தொய்வுகளை ஏற்படுத்தினாலும் விஜய் ரசிகர்களை மட்டும் கவரும். “வரலாம் வரலாம் வா பைரவா” என ஒலிக்கும் பின்னணி பாடல் விஜய்க்கு எதற்கோ அவருக்கு அழைப்பு விடுத்தாலும் நம்மை, திரையரங்கை விட்டு வீட்டுக்கு சீக்கிரம் போலாம் போலாம் வா வைரவா என துரத்தி விடுகிறது. இயக்குனர் பரதன் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை மீண்டும் கோட்டை விட்டிருக்கிறார் !
Rating 2/5.