தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில், விஷால் நடித்திருக்கும் மூன்றாவது படம், ‘ரத்னம்’. இதில், விஷாலுடன் ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, துளசி, ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், கெளதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, முத்துகுமார், ஹரீஷ் பெராடி, கஜராஜ், ஒய் ஜி மகேந்திரன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், கும்கி அஸ்வின், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்ஷன்’ – ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவந்திருக்கும் ‘ரத்னம்’ ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா?
வேலூர் ரௌடி, சமுத்திரக்கனி. இவரை ஒரு பெண் கொலை செய்ய முயற்சிக்கும்போது, சிறுவனாக இருக்கும் விஷால், அந்த பெண்ணை கொன்று சமுத்திரக்கனியை காப்பாற்றுகிறார். கொலை செய்ததற்காக சீர் திருத்த பள்ளிக்கு சென்று திரும்பும் விஷாலை, ரௌடியிலிருந்து ‘எம் எல் ஏ’ ஆகிவிட்ட சமுத்திரக்கனி, அரவணைத்து கொள்கிறார். இதன் பிறகு, இருவருக்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமாகிறது. சமுத்திரக்கனியின் அனைத்து தொழில்களையும் முன்னின்று நடத்தி வருகிறார்.
விஷால் ஒரு நாள் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவருக்குள் ஒரு வித்தியாசமான அன்பு ஏற்படுகிறது. விஷால், அவரை பின் தொடர்கிறார். இந்நிலையில் வெறிகொண்ட ஒரு கும்பல் பிரியா பவானி சங்கரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதிலிருந்து விஷால் காப்பாற்றுகிறார். கொலை செய்யத் தூண்டியவர்களின் பின்னணி விஷாலுக்கு தெரிய வருகிறது. இதில், விஷாலும் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘ரத்னம்’ படத்தின் அதிரடி ஆக்ஷன் திரைக்கதை.
முழுக்க, முழுக்க விஷாலை சுற்றி நகரும் கதை. அவருக்கு, அக்மார்க் ஆந்திர ஃப்ளேவர் கதாபாத்திரம். விஷால், ரத்னமாக படம் முழுவதும் எதிரிகளின் ரத்தத்தினை சிதறடிக்கிறார். லாஜிக் எதிர்பார்க்காத ஆக்ஷன் பிரியர்களுக்கு, அன்லிமிடெட் விருந்து படைத்திருக்கும் அவர், அம்மா சென்டிமென்ட் மூலமும் ரசிகர்களை கலங்கச் செய்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளில் விஷால் காட்டிய அக்கறையை, ஸ்டண்ட் மாஸ்டர் ‘கனல் கண்ணன்’ காட்டாதது தான், வேதனை! குழந்தைத் தனமான காட்சியமைப்புகள்!
பிரியா பவானி சங்கருக்கு திரைக்கதையோடு பயணிக்கும் முக்கிய கதாபாத்திரம். தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
ரௌடியாக இருந்து திருந்தி வாழும் எம் எல் ஏ கதாபாத்திரத்தினை, வழக்கம்போல் திறம்பட கையாண்டிருக்கிறார், சமுத்திரக்கனி.
யோகி பாபு வரும் காட்சிகள், ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை ஓகே.
வில்லன்களில் முரளி சர்மா, டெரர் காட்டுகிறார். அதற்கு பிறகு ஹரிஷ் பெராடி, முத்துக்குமார்.
மற்றபடி, விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் ஆகியோர் நடிப்பும் ஒகே.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் ஓகே.
இயக்குநர் ஹரி, தனது வழக்கமான பாணியிலிருந்து விலகியிருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை. இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில், இந்த ‘ரத்னம்’ ஆக்ஷன் பிரியர்களுக்கானது.