‘பென்ஸ் மீடியா’, ‘அவ்னி சினிமேக்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம், அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தினில், அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், கோவை சரளா, சேஷூ, டெல்லி கணேஷ் ராமசந்திர ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமான அரண்மனையின் உரிமையாளர், ஜமீன்தார் டெல்லி கணேஷ். இவருடைய ஒரே பேத்தி, ராஷி கண்ணா. இருவரும் அந்த அரண்மனையில் வசித்து வருகிறார்கள். இந்த பழைய அரண்மனையில் உள்ள சில பழுதுகளை சரி செய்து அதை விற்று கொடுக்கும் பொறுப்பேற்கிறார், சந்தோஷ் பிரதாப். இதனால், அவரது மனைவி தமன்னா மற்றும் தனது குழந்தைகளுடன் அரண்மனைக்கு வருகிறார்.
எல்லாம் சுமூகமாக நடந்து வரும் நிலையில், சந்தோஷ் பிரதாப் மர்மமான முறையில் ஒரு தீய அமானுஷ்ய சக்தியால் கொல்லப்படுகிறார். அதற்கு பிறகு, அந்த தீய சக்திஅரண்மனைக்குள் செல்கிறது. தமன்னாவையும் கொடூரமாக கொல்கிறது. இந்த கொலைகளை தற்கொலைகளாக போலீஸ் பதிவு செய்கிறது.
இந்த சம்பவங்களை அறியும் தமனாவின் அண்ணன் சுந்தர் சி, அரண்மனைக்குள் வருகிறார். இவர்களது கொலைகளின் பிண்ணனியில், ‘பாக்’ என்ற தீய சக்தி இருப்பது தெரிய வருகிறது. மேலும் அந்த தீய சக்தி, தமன்னாவின் மகளையும் கொல்லத்துடிக்கிறது. இதிலிருந்து, சுந்தர் சி தனது தங்கை, தமன்னாவின் மகளை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே ‘அரண்மனை 4’ படத்தின், கதை.
‘அரண்மனை’ படங்களின் வரிசையில் வெளியான அதே படங்களின் ‘டெம்ப்ளேட்’ தான் இந்த அரண்மனை 4. ஆனால் குடும்பமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண், பெண் ரசிகர்களுக்கான பொழுது போக்கு படமாக அமைந்துள்ளது. தென்னாட்டு பேய்களையே பார்த்து வந்த தமிழக ரசிகர்களுக்காக, வடநாட்டு பேயான ‘பாக்’ பேயினை அறிமுக படுத்தியிருக்கிறார், இயக்குநர் சுந்தர் சி. சினிமா மேஜிக்கை நன்கு உணர்ந்த சுந்தர் சி, பொழுது போக்கினை மட்டுமே கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் விதமாக உருவாக்கியிருக்கிறார். திரைக்கதையினை பொறுத்தவரையில், சற்றே வித்தியாசமாகவும் இருக்கிறது.
சுந்தர்.சி, ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில், தனக்கு என்ன வருமோ அதை அழகாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அவருக்கான காதல் காட்சிகள் இந்தப்படத்தில் மிஸ்ஸிங்!
வளர்ந்த, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கும் தமன்னா, தாயாகவும், பேயாகவும் எல்லாவிதமான உணர்வுகளையும் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
ராஷி கண்ணாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. சும்மா.. ஆங்காங்கே தலைகாட்டி விட்டுப்போகிறார். ராஷி கண்ணாவிற்காக ரசிகர்கள் கொடுத்த காசிற்கு, கடைசியில் வரும் புரோமோ பாடல் மட்டுமே ஆறுதல்!
யோகி பாபு, கோவை சரளா, சேஷூ, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடிகள் படத்திற்கான பெரிய பலமாக இருக்கிறது. ‘சினிமா’ தெரியாத ரசிகர்கள் படம் முழுவதும் சிரித்து மகிழ்வார்கள்.
டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் படத்தின் பக்க பலமாக இருக்கிறார்கள்.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை சிறப்பாக இருக்கிறது. க்ளைமாக்ஸில் வரும், குஷ்பு – சிம்ரன் ஆடும் ‘அம்மன்’ பாடலை பார்த்து ஒரு சில பெண் ரசிகைகள் ஆர்ப்பரித்து விடுவர்.
ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்.
பிரமாண்டமான அம்மன் மற்றும் அரக்கன் சிலை, சண்டைக்காட்சியில் கலை இயக்குநரின் திறமை தெரிகிறது.
கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இரண்டும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது.
சமீப காலங்களாக எல்லாப் படங்களிலும் இடம்பெறும் வார்த்தைகள், போதைப் பொருள், வன்முறை வெறியாட்டம், இவைகளை தவிர்த்து பொழுதுபோக்கு அம்சத்தை முன்னிறுத்தி, இயக்குநர் சுந்தர்.சி வழக்கம் போல் ஒரு பொழுதுபோக்கு படத்தினை கொடுத்துள்ளார்.
‘அரண்மனை 4’ – கோடை விடுமுறை கொண்டாட்டம்!