ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில்ஆதம்பாவா பேசும்போது, “இயக்குனர் அமீரின் ‘மௌனம் பேசியதே’ பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.
ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார்.. அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார்.
அவரை விடுதலை செய்த நீதிபதியே இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது. ‘உயிர் தமிழுக்கு’அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்.இவ்வாறு அவர் பேசினார்