கவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தினை பெற்று தந்தது. வளர்ந்து வரும் நடிகர்களிடைய ரசிகர்கள் பட்டாளம் இவர்க்கு அதிகம். இதனால், அவர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம். அந்த வகையில் “ஸ்டார்’ அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா?
ஸ்டார் படத்தினை இளன் இயக்கியிருக்க, இப்படத்தில் கவினுடன், லால், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
1980 களின் இறுதியில் கதை தொடங்குகிறது. பள்ளிக்கு செல்லும் வயதிலிருக்கிறார் கவின். அவருடைய அப்பா லால். அவருக்கு நடிப்பின் மேல் அபார ஈடுபாடு. எப்படியாவது நடிகனாகிவிட வேண்டுமென்ற அவரது கனவு, குடும்ப சூழல் காரணமாக கலைந்து போகிறது. இதனால் லால், ஒரு போட்டோகிரபராக தன்னுடைய வாழ்க்கையை தொடர்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற லாலின் கனவு, அவரது மகன் கவினுக்கும் தொற்றிக்கொள்கிறது. இது கவினின் அம்மா கீதா கைலாசத்திற்கு பிடிக்கவில்லை.
அம்மாவின் வற்புறுத்தலால், கவின் கல்லூரி படிப்பினை முடித்த பிறகு, பாம்பே சென்று நடிப்பு பயிற்சி படிக்க விரும்புகிறார். அழக்கம்போல் அப்பா லால் ஆதரவு தெரிவிக்க அம்மா கீதா கைலாசம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். முடிவில் பாம்பே செல்லும் கவின் நடிப்பு பயிற்சி பெற்று திரும்புகிறார். பல போராட்டங்களுக்கு பிறகு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு காரில் செல்கிறார், கவின். துரதிருஷ்டவசமாக அவர் பயணிக்கும் கார் விபத்தில் சிக்குகிறது. இதில் கவினுக்கு முகத்தில் பலத்த காயமேற்படுகிறது. உயிர் தப்பிப்பிழைத்த கவினின் முகத்தில் கோரமான வடு. அந்த வடுவினை கண்டு சுக்கு நூறாக உடைந்து போகிறார். சினிமாவில் நடிக்கும் அவரது கனவு தகர்ந்து போகிறது. இதன் பிறகு கவின் என்ன செய்தார்? என்பது தான், ‘ஸ்டார்’ படத்தின் கனவுகள் கைகூடும், மோட்டிவேஷனல் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!எப்படியாவது, நடிகனாகிவிடவேண்டும். என்ற ஏக்கத்துடன் இருக்கும் வாலிபனாக கலையரசன் கதாபாத்திரத்தில், கவின் தன்னை முழுமையாக பொருத்தி கொள்கிறார். வாய்ப்பினை எதிர்பார்த்து போன் அருகிலேயே காலை முதல் இரவு வரை காத்திருப்பது, பாம்பே சென்றபோது, பணத்தினை பறி கொடுத்து தெருவில் தூங்கி, பிழைப்புக்காக பல கூலி வேலைகள் செய்து நடிப்பு பள்ளியில் சேரும் காட்சி, பல நடிகர்களுக்கு பழைய நினைவுகளை ஏற்படுத்தும். அதிதி போங்ஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இருவருடனான காதல் காட்சிகளில், கவின் அழகாக நடித்திருக்கிறார். சுரபியை கன்னத்தில் அறைந்து விட்டு, ‘இதற்கு மேல் உன்னிடம் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்க முடியாது’. என கதறி அழும் காட்சிகளில், அவரின் தேர்ந்த நடிப்பில் ரசிகர்களின் கண்களில் நீர் கசியும்!
கதாநாயகிகளாக அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன். இருவருக்கும் சமமான வாய்ப்பு. அவரவர் கிடைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.
மற்றபடி, கவினின் அப்பாவாக லால், அம்மாவாக கீதா கைலாசம். மற்றும் மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், சஞ்சய் ஸ்வரூப், ராஜா ராணி பாண்டியன், தீரஜ் உள்ளிட்ட பலரும் இயக்குநரின் தேவைகேற்ப நடித்துள்ளனர்.
கதைக்கேற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர், எழில் அரசு. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சில பாடல்கள் திரும்ப கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை, இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். குறிப்பாக உணர்ச்சி மிகுந்த காட்சிகளில், சத்தம் அதிகமாக இருக்கிறது. சில காட்சிகளில், இசை மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
இயக்குநர் இளனின், திரைக்கதையில் சின்ன சின்ன சுவாரசியங்கள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அமையாதது, ஒரு சில ரசிகர்களுக்கு போரடிக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சி, இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாம். மோட்டிவேஷனல் காட்சிகள் எல்லோருக்குமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
ஸ்டார் – மோட்டிவேஷனல் டிராமா!