கடலூர் போலீஸ் ஸ்டேஷனின் சப் இன்ஸ்பெக்டர் (சுஜித் சங்கர்) பரசுராஜ், அவரது மனைவி (ரேஷ்மா வெங்கடேஷ்) சந்திரா சாவிற்கு, அவரே காரணமாக இருப்பதாக, அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் சந்தேகப்படுகிறார். அதன் பிறகு, சப் இன்ஸ்பெக்டர் (சுஜித் சங்கர்) பரசுராஜ், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, கொடைக்காணல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்.
மதுரையிலிருந்து, கொடைகாணலில் செட்டிலாக வரும், சித்த மருத்துவரான (அர்ஜூன் தாஸ்) சதாசிவ பாண்டியன் அங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.
பெங்களூரிலிருந்து கொடைக்காணல் வரும் ஐடி பெண் (தன்யா ரவிச்சந்திரன்) சூர்யா, அங்கேயே செட்டிலாக விரும்புகிறார்.
சதாசிவ பாண்டியனுக்கும், சூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. இருவரும் சந்தோஷமாக கொடைகாணலை சுற்றி வருகின்றனர். அழகாக அமைதியாக செல்லுகிறது, அவர்களது வாழக்கை. இது, இன்ஸ்பெக்டர் பரசுராஜூக்கு பிடிக்கவில்லை. அதோடு, சதாசிவ பாண்டியனை ஒழித்து கட்ட விரும்புகிறார். ஏன், எதற்கு? என்பதன் கேள்விகளுக்கு விடையளிக்கும் சுவாரசியமான, திக்.. திக், திரைக்கதையே ரசவாதி.
நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸூக்கு வித்தியாசமான கதாபாத்திரம். இதுவரை வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். ரேஷ்மா உடனான காதலின் போதும், தன்யா ரவிச்சந்திரன் உடனான காதலின் போதும், உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறைவான வசனங்கள், நிறைவான நடிப்பு. குறிப்பாக காதல் காட்சிகளில், அதிலும் தன்யா ரவிச்சந்திரனுடனான காட்சிகளில் (படுக்கையை நனைக்கும் பழக்கம் குறித்து ஆதரவாக பேசும் காட்சி) பெண் ரசிகைகளை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
நாயகி தன்யா ரவிச்சந்திரன். அழகான அமைதியான நடிப்பு. கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ். ஆதித்யா டிவியின் தொகுப்பாளினியாகவும், சில குறும்படங்களில் நடித்தவருமான இவர், அதிரி, புதிரியான நடிப்பினை கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறார். சதிஷின் நடன அமைப்புக்கு ஆடும் இவரது பரத நாட்டியம், இளைஞர்களின் நெஞ்சை தட தடக்க வைக்கிறது. அர்ஜூன் தாஸ் மடியில் அமர்ந்தபடி அவர் செய்யும் குறும்பும், திருமணமான பின்பு கணவனை பார்த்து, ‘நீ ஒரு சப்பை’ என வசனம் பேசி வெடிக்கும் காட்சிகளிலும், அவரது நடிப்புத் திறமை, அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுஜித் சங்கர். ஆர்ப்பாட்டமில்லாத டெரர் வில்லன். கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை, மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சாயலற்ற நடிகராக ‘சைக்கோ’ கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
மனநல மருத்துவராக ரம்யா சுப்ரமணியன். டெரராக அறிமுகமாகி, காமெடி பீஸாக ஆகும் தருணத்தில் தியேட்டரில் சிரிப்பலை. இவருக்கும், சுஜித் சங்கருக்கும் இடையிலான காட்சிகள் அனைத்தையும் ரசிக்கலாம்.
மற்றபடி ஜி.எம்.சுந்தர், ரிஷிகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக, திரைக்கதைக்கு ஏற்றபடி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவு, மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளிலும், சிறப்பான கோணங்கள். காட்சிகள் தனித்துவமாக, உயிர்ப்புடன் இருக்கிறது.
தமனின் இசையில் பாடல்கள், பின்னணி இசை, திரைக்கதைக்கு ஏற்றபடி, சிறப்பாக இருக்கிறது.
ஒரு ரெகுலரான காதல் கதை. அதை, வித்தியாசமான பின்புலத்தோடு, அதிக மெனக்கெடலுடன், சொல்லியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.
திருப்பங்களுடனும், சுவாரசியங்களுடனும் செல்லும் திரைக்கதையின் வேகத்தினை கூட்டியிருந்தால், மிகச்சிறப்பாக அமைந்திருக்கும்.
‘ரசவாதி’ – ரசிக்கக்கூடிய படம்!