கடந்த 2013ல் காதல் திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகியோர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர் இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்நிலையில் இவர்களது பிரிவு குறித்து . சமூகவலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ‛‛புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” என தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்
ஆனாலும்,சில யூடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்களில் இருவரின் பிரிவு தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து பாடகி சைந்தவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,: ‛‛பல யூடியூப் வீடியோக்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளை புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது.எங்கள் விவாகரத்து என்பது எந்தவொரு வெளிப்புற சக்தியாலும் நிகழ்ந்தது அல்ல. ஆதாரமற்ற முறையில் ஒருவரை மோசமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு. நானும் ஜி.வி.பிரகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருட நண்பர்கள். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சைந்தவியின் இந்த கருத்தை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளதாவது, ‛‛தங்களின் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்கள் சொல்லும் கதைகள் உண்மைக்கு புறம்பானது. மேலும் சிலர், தங்களின் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் சிலரின் குணாதியசங்களை மோசமாக சித்தரித்து குளிர் காய்கிறார்கள். இவர்களைத் தவிர எங்களின் கடினமான காலத்தில் ஆதரவளித்த மற்றவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.