திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா, தனது ‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில், ‘எலக்சன்’ படத்தினைத் தயாரித்திருக்கிறார். ‘சேத்து மான்’ படத்தினை இயக்கிய தமிழ் இயக்கியிருக்கிறார். இதில், உறியடி விஜய் குமார், ‘அயோத்தி’ புகழ் ப்ரீத்தி அஸ்ரானி , ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியன், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
பிரபலமான கட்சியின் விசுவாசத் தொண்டன், ஜார்ஜ் மரியன். இவரது மகன், ‘உறியடி’ விஜய்குமார். அப்பாவைப் போல் அரசியலை சுவாசிக்க விரும்பவில்லை. அரசியலில் நாட்டமில்லாத, சராசரி இளைஞன். காலமும், சூழலும் விஜய்குமாரை அரசியலுக்குள் இழுத்து விடுகிறது. அதற்கு பிறகு அவரது குடும்பமும், அவரும் என்ன நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். என்பதை, விறுவிறுப்புடன் பரபரப்பாக சொல்லும், பொலிட்டிக்கல் டிராமா தான், ‘எலக்சன்.’
இதுவரை சொல்லப்பட்ட அரசியல் படங்களிலிருந்து தனித்து நிற்கிறது, எலக்சன். இந்தப்படத்தில், எல்லாக் காலக்கட்டங்களிலும் சமுதாயத்தில் நடந்துவரும், அரசியல் ‘சாணக்கியத்தனம்’ என்று சொல்லப்படும், அனைத்து துரோகங்களையும் அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கு, படத்தில் காட்சிப்படுத்தப் பட்டவைகள் சற்று முரணாகத் தெரியும்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் இருப்பவர்களை, கதாபாத்திரங்களாக உருவகப் படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் ஒரு அரசியல் கதாபாத்திரத்தினையாவது நீங்கள் சந்தித்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது, அடிப்படை அரசியலே தெரியாத அப்பாவித்தொண்டன். தன்னுடைய சொத்துக்களை இழந்து கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பணத்தினை மட்டுமே குறியாகக் கொண்டு கட்சிகளில் பணியாற்றுபவர்கள். கட்சிகளில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் பண முதலைகள். அரசியல்வாதிகளால் ஓட்டுக்களை பிரிக்க களமிறக்கப்படும் ‘பலி’ ஆடுகள். இதற்கு சமீபத்திய உதாரணம், தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்ட (ஒ பன்னீர் செல்வம்) வகையறாக்கள். சாதிய அரசியல், பிணத்தின் மீதான அரசியல். இப்படி, நாட்டில் நிகழ்ந்து வரும் அனைத்தையும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், இயக்குநர் ‘சேத்துமான்’ தமிழ்.
அரசியலின் அரிச்சுவடி தெரியாத, சாமன்ய இளைஞனான நடராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உறியடி விஜய்குமார், சிறப்பாக நடித்திருக்கிறார். பாசமிகுந்த மகனாகவும், தோற்றுப் போன காதலின் வலியினையும், மனைவியை கொஞ்சியபடியே இருப்பதும், கட்சித் தலைவரால் அவமானப்பட்டு நிற்கும் அப்பாவின் வலியை கண்டு களங்கித் தவிக்கும் காட்சியிலும், பிறகு வீறு கொண்டு எழும் காட்சியிலும் கதாபாத்திரத்தை சிறப்பான முறையில் வெளிப் படுத்தியிருக்கிறார். சகித்துக்கொள்ளமுடியாத நிலையில் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகளில் சிலிர்ப்பினை ஏற்படுத்துகிறார்.
விஜய்குமாரின் மாமனாக, கனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவெல் நவகீதனுக்கு தனி அடையாளம் பெற்றுத்தரும் படமாக, இது இருக்கும். மிகச்சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். ஒரே கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பலவிதமான நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் அவருக்கு கிடைத்திருக்கிறது. சில இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் களங்கவும் வைத்துவிட்டார்.
பாவெல் நவகீதனின் நண்பனாகவும், துரோகியாகவும் சுதாகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திலீபன் செம்ம.., அவருக்கான கதாபாத்திரத்தின் போக்கினை அறிந்து, அவரும் சிறந்த முறையில் நடித்திருக்கிறார்.
விஜய்குமாரின் அப்பாவாகவும், வாழ்நாள் அனைத்தையும் கட்சிக்கு கொடுத்துவிட்டு, கட்சியின் மூலம் எந்த பலனையும் பெறாத அப்பாவி, அரசியல் கட்சித்தொண்டனாக ஜார்ஜ் மரியன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜய்குமாரின் காதலியாகவும், மனைவியாகவும் நடித்துள்ள, செல்வியாக ரிச்சா ஜோஷி, ஹேமாவாக ப்ரீத்தி அஸ்ராணி இருவருமே குறிப்பிடும்படி நடித்துள்ளனர். இவர்களில் ப்ரீத்தி அஸ்ராணிக்கு, நடிப்பதற்கு அதிக வாய்ப்பு , நடித்தும் இருக்கிறார்.
இப்படி, படத்தில் நடித்த பலரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி, உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, விறுவிறுப்பு ஆரம்பித்து விடுகிறது. இடைவேளிக்கு பின் சில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டு பின்னர் மறுபடியும் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக், சில டிவிஸ்டுக்களுடன் செல்கிறது.
மகேந்திரனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் இயக்குநர் தமிழின் காட்சிகளுகேற்ப கைகோர்த்து நிற்கிறது. படத்தின் பக்க பலமாகவும் அமைந்துள்ளது.
அழகிய பெரியவன், தமிழ், விஜயகுமார் ஆகியோரின், வீரியமிக்க வசனங்கள் படம் முழுவதும் இடம்பெறுகிறது. அதில் கட்சியின் அடிமட்டத் தொண்டனில் குரலாக ஒலிக்கும் ‘இல்லாதவன் உழைப்பான்.. இருக்கிறவன் அறுவடை செய்வானா..? என்ற வசனம், பலத்த கைதட்டல்களை பெறுகிறது.திராவிட அவசியத்தை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் ஏன் இவ்வளவு வன்முறை!? என்ற கேள்வி சிலருக்கு எழலாம்! அதற்கான ஒரே பதில், அரசியல் இல்லாமல் வன்முறை இல்லை! வன்முறை இல்லாமல் அரசியல் இல்லை! இது, அரசியல் பற்றி புரிந்தவர்களும், அன்றாடும் தினசரி செய்தித்தாளை படிப்பவர்களுக்கும் புரிந்தது தான்! இந்த நிலை மாறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அரசியல் என்பது, சொத்துக்களை குவிப்பதற்கோ, சாதிய அடையாளமோ, தனி மனித கௌரவமோ இல்லை. அது சமூக நீதிக்கானது என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார், இயக்குநர் தமிழ்.
நீங்கள் தேர்தலில் நிற்காமலே, அந்த அனுபவத்தினை பெற வேண்டுமானால் எலக்சன் படத்தை பாருங்கள்!